

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 28 தொகுதிகளில் போட்டியிடக் கூடிய காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான பணியில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்யும் கமிட்டி கூட்டம் இன்று மாலை மீண்டும் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 தொகுதிகளிலும் தலா 3 வேட்பாளர்களை இறுதி செய்து பட்டியலாக தயாரித்து காங்கிரஸ் தலைமையிடம் வழங்க உள்ளனர். அந்த பட்டியலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு ஆய்வு செய்து, அதில் இருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வேட்பாளரை இறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.