

சென்னை,
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை புறநகர்ப் பகுதியான ஊரப்பாக்கம் அடுத்த கீரைப்பாக்கம், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சிப் பகுதிகள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை கிராமத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் பல நாட்களாக விநியோகிக்கப்படாத காரணத்தால் பெரும் கொந்தளிப்போடு இன்று அப்பகுதிகளில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஜி.எஸ்.டி சாலை உட்பட இதனால் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளானது..
மேற்கூறிய மூன்று சாலை மறியல்களும் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஆங்காங்கே இன்னம் பல இடங்களிலும் பெரும் நெருக்கடியினை மக்களுக்கு உண்டு பண்ணுவதை தெளிவாகச் சொல்கிறது. இது வரை வந்து கொண்டிருந்த குடிநீர் தவெகவின் புதிய ஆட்சியில் மறுக்கப்படுவதும் தடுக்கப்படுவதும் கடும் அதிர்ச்சியளிக்கிறது. கோடை காலம் சென்ற பிறகும் ஏன் இந்த நெருக்கடி நிலை என புதிய அரசு சிந்திக்க வேண்டும். முக்கால்வாசி இடங்களில் நதி நிலைகள் தூர் வாரப்படாமல் இருப்பதே குடிநீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என உணர்ந்து அதில் உடனடியாக நிதி ஒதுக்கி செயல்பட வேண்டும். பல்வேறு விதங்களில் வரிப்பணம் செலுத்தும் மக்களுடைய உரிமையே இந்த நீர்நிலை ஆதாரங்களும், முறையான குடிநீர் விநியோகமும்.
ஏற்கனவே சென்னை புறநகரில் பல மணி நேரங்களுக்கு அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பெரும் அவப்பெயரை தமிழக மக்களிடம் பெற்று விட்ட வெத்துவேட்டு தவெக அரசு, இந்த அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் ‘இப்பத்தானே ஆட்சிக்கு வந்திருக்கோம்..மெள்ள மெள்ள ஒவ்வொன்றாக சில மாதங்களில் செய்வோம்’ எனும் சால்ஜாப்புகள் உதவாது. அது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை தமிழக முதல்-அமைச்சர் உணர்ந்து செயல்பட வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.