ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பிரசவம்: ஆம்புலன்சிலேயே பிறந்த ஆண் குழந்தை

தாயும், சேயும் மேல் சிகிச்சைக்காக சேப்பாக்கத்தில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
குழந்தை
Published on

சென்னை,

சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவருடைய மனைவி வாணிப்ரியா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ்

இதனையடுத்து, அவருடைய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த உடனே அருகாமையில் இருந்த வேளச்சேரி பகுதி ஆம்புலன்ஸ் குழுவினர் வாணிப்ரியாவின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரை ஆம்புலன்சில் ஏற்றி, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் வாணிப்ரியாவிற்கு பிரசவவலி அதிகமானது. குழந்தை பிறக்கும் அறிகுறி தெரிந்ததால், ஆம்புலன்சை ஊழியர்கள் ஓரமாக நிறுத்தினர். தொடர்ந்து, ஆம்புலன்சில் இருந்த அவசர மருத்துவ சிகிச்சை நிபுணர் யுவராஜாவின் துரித முயற்சியால் வாணிப்ரியாவிற்கு ஆம்புலன்சிலேயே சுகப்பிரசவம் நடந்தது.

அவருக்கு 2.4 கிலோ எடையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் மேல் சிகிச்சைக்காக சேப்பாக்கத்தில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com