புஞ்சைபுளியம்பட்டியில் சீராக குடிநீர் வினியோகிக்ககோரிபெண்கள் சாலை மறியல்

புஞ்சைபுளியம்பட்டி அருகே சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புஞ்சைபுளியம்பட்டியில் சீராக குடிநீர் வினியோகிக்ககோரிபெண்கள் சாலை மறியல்
Published on

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 4-வது வார்டுக்குட்பட்டது குமரன் வீதி, தாகூர் வீதி. இந்த பகுதிகளுக்கு நகராட்சி மூலம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சீராக தண்ணீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் நகராட்சி உறுப்பினர் துளசிமணி தலைமையில் நேற்று காலை காலிக்குடங்களுடன் புஞ்சைபுளியம்பட்டி-பவானிசாகர் ரோட்டில் உள்ள பழைய மார்க்கெட் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வழங்கக்கோரி...

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, நகராட்சி துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம், பொறியாளர் கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, 'எங்கள் பகுதியில் குடிநீர் சரியாக வருவதில்லை. 2 மணி நேரம் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. இது போதுமானதாகவில்லை. இதர தேவைகளுக்கும் கிணற்றில் இருந்து சரியாக தண்ணீர் வழங்கப்படுவதில்லை. இதனால் நாங்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தண்ணீரின்றி மிகவும் சிரமப்படுகிறோம். உடனே எங்கள் பகுதியில் சீரான முறையில் தண்ணீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்.

நடவடிக்கை

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் கூறும்போது, 'ஆங்காங்கே குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக உங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகிக்க முடியவில்லை. உடனே குழாய் உடைப்பை சரிசெய்து உங்கள் பகுதியில் குடிநீர் வினியோகிக்கவும், இதர தேவைகளுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியலால் புஞ்சைபுளியம்பட்டி-பவானிசாகர் ரோட்டில் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com