

கொரடாச்சேரி:
தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
மாநாடு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாநில தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் சுவாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
பின்னர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவிரியில் உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்படுவதால் கரையோர கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பருத்தி, வாழை உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும்.
வெள்ள காலங்களில் வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை பயனுள்ள வகையில் வறண்ட ஏரி, குளங்களை சீரமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும். காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்
சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். விவசாய நிலங்களின் தேவைக்கேற்ற அளவில் முழுமையான உரங்களை மத்திய அரசு வழங்க வேண்டும். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
போராட்டம்
நிதி நெருக்கடியை காரணம் காட்டி அரசு ஊழியர்களின் கோரிக்கைகளும், தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் போராட்டம் நடத்துவது தவிர்க்க முடியாததாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.