ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - சீமான்

உரிமைக்கேட்டு போராடக் கூட அனுமதி தர மறுப்பது அரச அடக்குமுறையின் உச்சம் என்று சீமான் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகளுக்காகப் போராடும் ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களைப் பெண்கள் என்றும் பாராமல் காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி சிறையில் அடைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. வாழ்வாதார உரிமையை வழங்க மறுக்கும் திமுக அரசு, அறவழியில் போராடக்கூட அனுமதி மறுப்பது கொடுங்கோன்மையாகும்.

2005-ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த பணியாளர்களாக ஏறத்தாழ 12,000 சகோதரிகள் ஊரக / நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களாக ஒப்படைப்பு உணர்வோடு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அரும்பாடுபட்டு பணியாற்றி வருகின்றனர். மகளிர் சுய உதவிக்குழு முதல் மாநில - ஒன்றிய அரசின் அனைத்துத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க, நேரடியாகக் களத்தில் இறங்கி பணியாற்றும் திட்டப் பணியாளர்களின் பங்கு அளப்பரியதாகும். படிப்பறிவற்ற கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு அரசின் திட்டங்களை விளக்கி, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முதுகெலும்பாகத் திகழும் ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட பணியாளர்களின் பணி மிகுந்த போற்றுதலுக்குரியது.

Also Read
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் துணை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு ஆலோசனை
கோப்புப்படம்

தங்களின் உடல் நலனைப் பொருட்படுத்தாமல் இரவு, பகல் பாராமல் கடின உழைப்பைச் செலுத்தி அரசுக்கும் மக்களுக்கும் பாலமாகத் திகழும் சிறப்புமிக்க ஊரக நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட பணியாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கி, உரிய ஊதியம் வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயப் பொறுப்பும், கடமையுமாகும். அதனைச் செய்யத்தவறி, மக்கள் பணியாளர்களான சகோதரிகளை அடிப்படை உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராட விடுவது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.

தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமலும், உரிய ஊதிய உயர்வு வழங்காமலும் திமுக அரசு ஏமாற்றி வருவதால் 12,000 பணியாளர்களும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். விலைவாசி பன்மடங்கு அதிகரித்துவரும் நிலையில், அதற்கேற்ற ஊதிய உயர்வு வழங்க மறுப்பதால் அவர்களின் குடும்பம் வறுமையில் வாடும் அவலநிலை மிகுந்த வேதனைக்குரியது.

Also Read
ஆத்தாடி அவ்வளவு பெருசா...? உலகின் மிக நீளமான மலைப்பாம்பு கண்டுபிடிப்பு..!
கோப்புப்படம்

திமுக அரசு போராடும் திட்டப்பணியாளர்களுக்கு வாழ்வாதார உரிமைகள்தான் வழங்கவில்லை. குறைந்தபட்சம் உரிமைக்கேட்டு போராடக் கூட அனுமதி தர மறுப்பது அரச அடக்குமுறையின் உச்சமாகும். அறவழியில் போராடுவது என்பது அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அதைக்கூட திமுக அரசு அனுமதிக்க மறுத்துப் பெண்கள் என்றும் பாராமல் காவல்துறையை மூலம் அடக்குமுறையை ஏவி, கைது செய்வது என்பது கொடுங்கோன்மையாகும்.

இதுதான் திமுகப் பெற்றுத்தந்த சம உரிமையா? கட்டிக்காத்த சமூக நீதியா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதற்குப் பெயர்தான் விடியல் ஆட்சியா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? வெட்கக்கேடு!

Also Read
காப்பி அடித்த மாணவர்கள்... உதவி செய்த ஆசிரியர்கள்... டிரோன் கேமராவில் சிக்கிய சம்பவம்
கோப்புப்படம்

ஆகவே, அடிப்படை உரிமை கேட்டுப் போராடும் ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்கள் மீது அடக்குமுறையை ஏவும் கொடுங்கோன்மையைக் கைவிட்டு, அவர்களின் வாழ்வாதார உரிமையான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு ஆகியவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் எனதருமை சகோதரிகளான ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்லும்வரை, நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்துத் துணைநின்று போராடும் என்பதையும் இவ்வறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com