
சென்னை,
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், பாக்யராஜ் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் பொற்கால இயக்குநர்களில் ஒருவராக விளங்கிய அவரது படைப்புகள் என்றும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும்.
மத்திய இணையமைச்சர் எல். முருகன் வெளியிடுள்ள பதிவில், ”தமிழ் திரைப்பட உலகில் தனது தனித்துவமான படைப்பாற்றலாலும், குடும்பப் பாசம் மற்றும் சமூக மதிப்புகளை வலியுறுத்திய திரைப்படங்களாலும், தலைமுறைகள் பலரின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கே. பாக்யராஜ். அண்மையில் திரையுலகில் தனது 50 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்து, திரையுலகினராலும் ரசிகர்களாலும் சிறப்பாகப் பாராட்டப்பட்ட நிலையில், அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி...!..” என தெரிவித்தார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ்த் திரையுலகின் தளகர்த்தர்களில் ஒருவரும், சிறந்த திரைக்கதையாசிரியர் என போற்றப்பட்டவருமான இயக்குனர் கே.பாக்யராஜ் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவால் காலமான அதிர்ச்சியிலிருந்து தமிழ்த் திரையுலகம் இன்னும் மீளாத நிலையில், அவரது மாணவரும், தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞராக திகழ்ந்தவருமான பாக்யராஜும் மறைந்திருப்பது சோகத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. பாரதிராஜாவின் பள்ளியில் உருவான பாக்யராஜ் அவர்கள், தமக்கென்று தனிப் பள்ளியை உருவாக்கி ஏராளமான புதிய இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகளை அறிமுகம் செய்தார். திரையுலகில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பல கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தது அவரின் மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாகும்.
திரையிலகில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசை என திரைத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் வல்லமை பெற்று பன்முகக் கலைஞராக திகழ்ந்தவர். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்.
திரையுலகில் எவரும் பேசத் துணியாத பல உண்மைகளை எவர் மனமும் புண்படாதவாறு நகைச்சுவையுடன் திரைமொழியாக பேசியவர். திரைப்படங்களின் வாயிலாக சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் கூறியவர். 45 ஆண்டுகளுக்கு முன் அவர் இயக்கிய திரைப்படங்களை இப்போது பார்த்தாலும் ரசிக்கும்படியாகவும், இன்றைய காலத்திற்கு பொருந்தும் வகையிலும் இருக்கும் என்பது தான் காலத்தைக் கடந்த இயக்குனர் அவர் என்பதற்கு சான்று ஆகும். எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய முதல்வர்களின் அன்பைப் பெற்றிருந்த கே.பாக்யராஜ் அவர்கள், எம்.ஜி.ஆரால் அவரது கலை உலக வாரிசாக அறிவிக்கப்பட்டவர்.
திரையிலகிற்கு வெளியில் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலிலும் கால் பதித்த பாக்யராஜ், பின்னர் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிலும் சில காலம் பயணித்திருக்கிறார். பாக்யா என்ற பல்சுவை வார இதழையும் தொடங்கி பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தியவர். அரசியல் தவிர தாம் கால்பதித்த அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற்ற பெருமையும், சிறப்பும் அவருக்கு உண்டு.
இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள பதிவில், ”நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது.
தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், இயக்குநர், திரைக்கதையாசிரியர் எனப் பல்வேறு துறைகளில் தனித்துவமான முத்திரை பதித்த அவரது மறைவு, தமிழ்த் திரையுலகிற்கும், கலை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் இரசிகர்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.
அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, பாக்கியராஜ், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
பாக்கியராஜ் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரைக்கதை இயற்றுவதில் பாக்யராஜ் அவர்களை மிஞ்சும் அளவுக்கு எவரும் இல்லை என்று கூறும் வகையில் தனது படைப்புகள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர்.
அவரை இழந்து வாடும் ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அவரது ஆத்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்தார்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ் (73) இன்று (27.06.2026) சென்னையில் காலமானர் என்ற துயரச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளால் கோயிலில் 1953 ஜனவரி 7 ஆம் தேதி பிறந்த பாக்யராஜ் தீவிரமான எம்ஜிஆர் ரசிகர். சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் காட்டி வளர்ந்தவர்.
அண்மையில் காலமான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் முதல் படமான “16 வயதினிலே” என்ற திரைப்படத்தில், அவரது உதவியாளராக திரையுலகில் நுழைந்தவர் பாக்யராஜ். தொடர்ந்து வசனக் கர்த்தா, நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவராக வளர்ந்து, தனது தனிமுத்திரையை பதித்து அழியாப் புகழ் பெற்றுள்ளார்.
திரைத்துறையில் மட்டும் அல்லாமல், அரசியலிலும் கால்பதித்து நடைபோட்டவர். அஇஅதிமுக உறுப்பினராக இணைந்து செயல்பட்டவர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சி அமைத்து செயப்பட்டவர். இந்தக் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் அஇஅதிமுகவில் இணைந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுடன் முரண்பட்டு, அங்கிருந்து விலகி திமுகழகத்தில் சேர்ந்து சில காலம் செயல்பட்டார். பிறகு கட்சி சார்ந்த அரசியலில் இருந்து விலகி விட்டார்.
பத்திரிகையாளராக, “பாக்யா” மாத இதழ் தொடங்கி அதன் ஆசிரியராக செயல்பட்டார். கொங்கு நாட்டு பேச்சு வழக்கில், அவரது இயல்பான பேச்சு பலரையும் பரவலான ரசிகர் வட்டத்தை உருவாக்கித் தந்தது.
பாக்யராஜிடம் பணியாற்றியவர்கள் பாண்டியராஜன், ரா.பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன் போன்றோர் முன்னணி இயக்குநர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
இயக்குநர் கே.பாக்கியராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர் பூர்ணிமா பாக்யராஜ், மகள் சரண்யா, மகன் சாந்தனு மற்றும் திரையுலக நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவித்தார்.
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள பதிவில் , ”பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான அன்பு சகோதரர் பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
பல்துறை வித்தகரான பாக்யராஜ் அரை நூற்றாண்டாக தமிழ் சினிமா உலகில் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர். வாழ்நாள் சாதனையாளர் விருது, பிலிம்பேர் விருதுகளை பெற்று இருக்கிறார். திரைப்படத்துறையில் பன்முகத்தன்மை கொண்ட திரு.பாக்யராஜ் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்தவர். புரட்சித்தலைவி அம்மா மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். பாக்யராஜ் அரசியலில் எங்களோடு பயணித்த நாட்களை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
அன்பு சகோதரர் பாக்யராஜ்யை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என தெரிவித்தார்.
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள பதிவில், ”நடிகரும், திரைப்பட இயக்குனரும், சிறந்த திரைக்கதை ஆசிரியரும், பாக்யா வார இதழ் நிறுவனருமான பாக்யராஜ் உடல்நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் திரைத்துறையினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ் திரையுலகின் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் இன்று காலமானார் என்ற செய்தி என்னை மிகுந்த துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரது படைப்புகள் இன்றளவும் சிறந்த பாடமாக விளங்கி வருகின்றன. எளிமையான கதை, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றை தனக்கே உரிய பாணியில் இணைத்து, தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகளை அவர் வழங்கியுள்ளார்.
அவரது திரைப்படங்கள் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும். அவரது கலைப் பயணமும், சாதனைகளும் வருங்கால இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், ”பன்முகத் திறமைகளால் தமிழ் திரையுலகில் தனித்துவமான முத்திரை பதித்த திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கே. பாக்யராஜ் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற தரமான படைப்புகளை வழங்கி, தனது தனித்துவமான திரைக்கதை அமைப்பு, வசன நடை மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். அவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மறைந்த கே. பாக்யராஜ் அவர்களுக்கும், நமது கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் நீண்டகால அன்பும் நட்பும் நிலவியது. குறிப்பாக 'சொக்கத்தங்கம்' திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றிய நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை. கேப்டன் அவர்களின் கலைப் பயணத்தில் பாக்யராஜ் அவர்கள் வகித்த நட்பும் பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், ” திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தனித்துவமான முத்திரையைப் பதித்த கே. பாக்யராஜ் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
தனது படைப்பாற்றலால் நகைச்சுவை உணர்வு மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவு கூறத்தக்கவை. அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழின் முன்னணி திரைக்கலைஞர் பாக்கியராஜ், மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது ஜனரஞ்சகமான படைப்புகளால் தடம் பதித்து, ஐம்பதாண்டுகளாக தமிழ்த் திரைதுறைக்கு பல முக்கிய பங்களிப்புகளை அளித்தவர். தனது திரைக்கதைகளில் மனித மனங்களின் உளவியலை பிரதானமாக வைத்து தமிழில் பல முக்கிய மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற படைப்புகளைத் தந்த அவர், 'திரைக்கதை மன்னன்' என்று புகழப்பட்டவர்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகத் தன்மை கொண்ட அன்புச் சகோதரர்
கே. பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத்
துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் ‘பதினறு வயதினிலே’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த திரு. பாக்யராஜ் அவர்கள், பாரதிராஜா இறந்த 17 நாட்களுக்குள் காலமாகிவிட்டார் என்ற செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. ‘முந்தானை முடிச்சு’, ‘அந்த ஏழு நாட்கள்’, ‘இன்று போய் நாளை வா’, ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள். பழகுவதற்கு மிக எளிமையானவர். மிகச் சிறந்த பண்பாளர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான பாக்யராஜ் , பல திரைப்பட இயக்குநர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். பல விருதுகளுக்கு சொந்தக்காரர். பாக்யராஜின் மறைவு தமிழக மக்களுக்கு, குறிப்பாக திரைத் துறையினருக்கு பேரிழப்பு.
பாக்யராஜ்யை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், திரைத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்தார்.
அமமுக பொதுச்செய்லாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ் சினிமாவில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி திரைக்கதைகளின் மன்னராக வலம் வந்தவரும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக திகழ்ந்தவருமான கே.பாக்கியராஜ் திடீர் மாரடைப்பால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது.
துணை இயக்குநராக திரையுலகில் அடியெடுத்துவைத்து இயக்குநராக, கதாசிரியராக நடிகராக என அரை நூற்றுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் கோலோச்சி, புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த கே.பாக்கியராஜ்யை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்தார்.
பா.ஜ.க. மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என் இளம் வயதில் பாக்யராஜ் அவர்களின் படங்களை விரும்பி ரசித்து பார்ப்பேன். மிகச் சிறந்த கலைஞராகிய அவரின் மிகப்பெரிய விசிறி நான். அவரின் எந்த படத்தையும் நான் பார்க்கத் தவறியதில்லை. "முந்தானை முடிச்சு, அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா, இது நம்ம ஆளு, எங்க சின்ன ராசா, சின்ன வீடு, சுவர் இல்லாத சித்திரங்கள் என பல்வேறு படங்கள்.
'முந்தானை முடிச்சு' ஊர்வசி என்ற சிறிய பெண்ணோடு நடித்த அவரின் முதிர்ச்சி. ஒரு மிகப் பெரிய வெற்றி படம். 'சின்ன வீடு' படத்தில் அவரின் நடிப்பு சிறப்பு. குறிப்பாக சின்ன வீட்டுக்கு சென்று மாட்டிக்கொண்ட பின் அவரின் திரு திரு 'முழி'. 'டார்லிங், டார்லிங், டார்லிங்'ல் பூர்ணிமா ஜெயராமோடு களை கட்டினார். பிரமாதமான படம். 'தூறல் நின்னு போச்சு' படத்தில் நம்பியாரோடு அவரின் நடிப்பு தூள். நான் சிகப்பு மனிதன் படத்தில் இயல்பான மனிதனாக ஒரு காவல்துறை அதிகாரி வேடம். 'புதிய வார்ப்புகள்', 'விடியும் வரை காத்திரு' , 'வீட்ல விசேஷங்க','ராசுக்குட்டி' என பல்வேறு படங்கள் அவரின் நடிப்பில். உத்தம புத்திரனில் தனுஷின் தந்தையாக அசத்தியிருப்பார்.அவரின் மிகப் பெரிய சொத்தே காமெடி கலந்த ஹீரோயிசம், அவரின் கண்ணாடி, குரல். அவர் நடிப்பில் ஒரு எதார்த்தம் கலந்திருக்கும். 'தாவணிக் கனவுகள்' நான் மிகவும் ரசித்து பார்த்த படம்.
சிறிய வயதில் அவரின் 'பாக்யா' வார இதழை அவரின் கேள்வி - பதில்களுக்காக காத்திருந்து வாங்கி படித்த அனுபவம் உண்டு. அரசியலில் ஆர்வம் இருந்தாலும் அவரால் சோபிக்க முடியவில்லை. ஒரு நல்ல கலைஞரை நாம் இழந்து விட்டோம். சமீப காலங்களில் அவரை ஒன்றிரண்டு முறை சந்தித்து பேசியிருக்கிறேன்.
அவரின் மறைவு சோகம். அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ் திரையுலகில் தலைசிறந்த கதையாசிரியர், இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முக திறன் படைத்த கே.பாக்கியராஜ் இன்று உயிரிழந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
இயக்குநர் பாக்கியராஜ் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றி, தனது நடிப்பாலும் உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். கிராமிய வாழ்க்கையை மையமாக கொண்ட கதையினாலும், இயல்பான நகைச்சுவையினாலும், குடும்ப பாங்கான நடிப்பாலும் தமிழக மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.
ஞானப்பழம், இது நம்ம ஆளு படங்களில் தனது நடிப்பின் மூலம் முற்போக்கு சுருத்துக்களையும், விழுமியங்களையும் எளிய முறையில் மக்களுக்கு கொண்டு சென்றவர். தமிழ் திரையுலகம் மட்டுமின்றி அரசியலிலும், வார இதழின் ஆசிரியராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். பல திரைப்பட இயக்குநர்களை உருவாக்கியதிலும் முக்கிய பங்காற்றியவர். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது இணையர் பூர்ணிமா பாக்கியராஜ்க்கும், மகள் சரண்யா, மகன் சாந்தனு மற்றும் உறவினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.