

சென்னை,
தமிழக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ள நிலையில், திமுக - விசிக இடையே வார்த்தைப்போர் வெடித்து வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றுள்ள விசிக, தற்போது தவெகவில் இணைந்து அமைச்சரவையிலும் இடம்பெற்றதை திமுகவினர் கண்டித்து வருகின்றனர். இதற்கு தொகுதி பங்கீட்டின்போது திமுகவினர் முறையாக நடத்தவில்லை போன்ற சில புகார்களை விசிகவினர் முன் வைத்துள்ளனர்.
இந்த வார்த்தை போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், ”தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கட்சி தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.” என தெரிவித்ததுடன், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விசிகவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த பதிவை சுட்டிக்காட்டி விசிக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
தலைவரின் வார்த்தைகளை மதிக்கத் தெரியாத தொண்டர்களுக்கு...
"அரசியல் முடிவை எடுக்க எந்தக் கட்சிக்கும் உரிமை உண்டு" என்று தலைமை நாகரிகமாகப் பேசுகிறது. ஆனால், கீழ்மட்ட ஐடி விங்கோ ஆபாச வார்த்தைககளை பயன்படுத்துகிறது! யார் அண்ணா வழியில் வந்தவர்கள்? விசிக ஒன்றும் யாருக்கும் எழுதி வைக்கப்பட்ட கொத்தடிமை அல்ல; அது கோடிக்கணக்கான மக்களின் உரிமைகளைத் தாங்கி நிற்கும் ஒரு சுயாதீனமான பேரியக்கம் (Independent Party).
ஜனநாயகம் என்பது நீங்கள் நினைப்பது போல ஒற்றைக் கட்சி ஆதிக்கம் அல்ல. கூட்டணிக் கட்சிகளை வெறும் வாக்கு வங்கியாகச் சுரண்ட நினைத்த உங்களின் போலி 'சமூக நீதி' அரசியலுக்கு, விசிக-வின் இந்த அதிகாரப் பகிர்வு ஒரு வரலாற்றுப் பாடம்! ஆபாசமாகப் பேசுபவர்கள் கதறிக் கொண்டே இருங்கள்... சிறுத்தைகள் கோட்டைக்குள் கம்பீரமாய் நுழைகிறார்கள்!”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.