தனி ஒருவனாக வென்ற 'ஜனநாயகன்'!

சட்டசபை தேர்தலை தனித்தே சந்திக்க வேண்டிய நிலை த.வெ.க.வுக்கு வந்தது.
தனி ஒருவனாக வென்ற 'ஜனநாயகன்'!
Published on

சென்னை,

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவியது. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்த ஆளுங்கட்சியான தி.மு.க. 164 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28, தே.மு.தி.க. 10, விடுதலை சிறுத்தைகள் கட்சி 8, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5, ம.தி.மு.க. 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2, மனிதநேய ஜனநாயக கட்சி 1, எஸ்.டி.பி.ஐ. 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டாலும், அ.தி.மு.க. 165, பாஜக 27, பாமக 18, அமமுக 11, தமாகா 5, புதிய நீதிக்கட்சி 1, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி தொகுதியை தவிர்த்து 233 தொகுதிகளிலும், இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. நடிகர் விஜய் த.வெ.க.வை தொடங்கிய போதே, 'எங்கள் கட்சியுடன் யாரும் கூட்டணிக்கு வரலாம். கூட்டணிக்கு வந்தால், ஆட்சியிலும் பங்கு தரப்படும்' என்று அறிவிப்பு வெளியிட்டார். தேசிய கட்சியான காங்கிரஸ், த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி 70 தொகுதிகளை உறுதி செய்ததாக கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை அக்கட்சி உறுதி செய்தது.

இப்படி, 'கடை விரித்தும் கொள்வார் இல்லை' என்ற நிலையில், சட்டசபை தேர்தலை தனித்தே சந்திக்க வேண்டிய நிலை த.வெ.க.வுக்கு வந்தது. அதுவும் ஒரு வகையில் அக்கட்சிக்கு நல்லதாகவே அமைந்துவிட்டது. தற்போது, த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்துள்ளது. பெரும்பாலான த.வெ.க. வேட்பாளர்கள் யார்? என்று மக்களுக்கே தெரியாத போதும், விஜய் முகத்தை வைத்து விசில் சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர். மொத்தத்தில், தனி ஒருவனாக 'ஜனநாயகன்' விஜய் வென்றிருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com