அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 2-வது தளத்தை இடிக்க வேண்டும் - மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 2-வது தளத்தை 8 வாரங்களுக்குள் இடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு, சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 2-வது தளத்தை இடிக்க வேண்டும் - மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை ஐகோர்ட்டில், போரூரில் உள்ள ஜெயபாரதி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ள மனுவில், "எங்கள் பகுதியில் வசிக்கும் செங்கன், தனக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல்மாடியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொபைல் டவரை வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த கட்டிடத்தின் 2-வது தளம் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டின் மேல் மொபைல் டவர் வைத்தால், அதில் இருந்து கதிர்வீச்சு வெளியேறும். அதனால், அருகில் குடியிருப்போருக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த வீட்டின் மீது டவர் வைக்க அனுமதிக்கக்கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட வீட்டின் 2-வது தளம் அனுமதியுடன் கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் கமிஷனராக வக்கீல் பகவத் கிருஷ்ணா என்பவரை நியமித்தது. அவர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், கட்டிடத்தின் மொட்டை மாடியில் மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் பல கடைகள் உள்ளன. முதல் தளத்தில் 16 அறைகள் உள்ளன. அந்த அறைகளில் திருமணம் ஆகாதவர்கள் தங்கியுள்ளனர். கட்டிட வரைபட அனுமதியின்படி இந்த கட்டிடம் கட்டப்படவில்லை. விதிமீறல்கள் உள்ளன. 2-வது தளம் முற்றிலும் அனுமதியின்றி கட்டப்பட்டு உள்ளன'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் விசாரித்தார். அப்போது, கட்டிட உரிமையாளர் தரப்பில், 2-வது தளம் அனுமதியின்றி கட்டப்பட்டு உள்ளது. இதை வரையறை செய்ய அரசுக்கு அனுமதி கேட்டு மனு எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில், "மொபைல் டவர் வைக்கப்பட்டுள்ள 2-வது தளமே அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது என்பது உறுதியாகி உள்ளது. அதை கட்டிட உரிமையாளரும் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 2-வது தளத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் 8 வாரத்துக்குள் இடிக்க வேண்டும். அதுகுறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற ஜூன் 30-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com