பெரம்பூரில் மெட்ரோ ரெயில் பணிக்காக முருகன் கோவில் இடித்து அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பெரம்பூரில் மெட்ரோ ரெயில் பணிக்காக மாநகராட்சி நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய முருகன் கோவில் இடித்து அகற்றப்பட்டது.
பெரம்பூரில் மெட்ரோ ரெயில் பணிக்காக முருகன் கோவில் இடித்து அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
Published on

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் ஆயிரம் சதுர அடி கொண்ட காலி நிலம் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கொடுங்கையூர் சின்னாண்டி மடம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த சோலை மற்றும் அவருடைய மனைவி இருசம்மாள் ஆகியோர் இந்த இடத்தை ஆக்கிரமித்து முருகன் கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.

இங்கு பாலசுப்பிரணியர், வள்ளியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விமான கோபுரம் உள்பட 2 கோபுரத்துடன் கூடிய இந்த கோவிலில் அந்த பகுதி பொதுமக்களும் வழிபட்டு வந்தனர்.

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிக்காக இந்த கோவில் அமைந்துள்ள இடத்தை மெட்ரோ அதிகாரிகள் தேர்வு செய்து, மாநகராட்சியிடம் அனுமதி கேட்டனர். அதற்கு சம்மதம் தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமித்து கட்டிய கோவிலை இடித்து அகற்றும்படி கடந்த டிசம்பர் மாதம் சோலை-இருசம்மாள் தம்பதிக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டல அதிகாரி முருகன், 71-வது வார்டு உதவி செயற்பொறியாளர் பாபு ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் 3 பொக்லைன் எந்திரம் உதவியுடன் கோவிலை இடிக்க நேற்று அதிகாலை 5 மணியளவில் வந்தனர்.

முன்னதாக கோவிலுக்கு வழங்கப்பட்ட மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செம்பியம் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் தயாராக இருந்தனர்.

முதலில் கோவிலில் இருந்த முருகன், வள்ளி உள்ளிட்ட சாமி சிலைகள் அகற்றப்பட்டு கோவில் நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் முருகன் கோவில் இடித்து அகற்றப்பட்டது. திடீரென பொக்லைன் எந்திரம் பழுதடைந்ததால் காலை 11 மணிக்குள் முடிக்க வேண்டிய பணி மதியம் 2 மணிவரை நீடித்தது.

இதற்காக அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஒருவழிப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

நேற்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. பெரம்பூர் பகுதியை சுற்றிலும் அதிகளவில் மேல் நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளது. இந்த பாக்குவரத்து நெரிசலில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளும் சிக்கிக்கொண்டதால் தேர்வுக்கு நேரம் ஆகிவிடுமோ? என்ற பதற்றத்தில் பள்ளிக்கு செல்லும்போதே மிகுந்த மனஉளைச்சலுடன் சென்றதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com