

கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, 3 சதவீத அகவிலைப்படியை மின்வாரிய ஓய்வு பெற்றோர்களுக்கு வழங்காததை கண்டித்து, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். நிர்வாகி பூபாலன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் முனிரத்தினம், இணை செயலாளர் கிருஷ்ணன், மத்திய அமைப்பு மின் ஊழியர் கருணாநிதி, ஓய்வூதியர் சங்கம் முனியன், குணசேகரன், இணை செயலாளர் நந்தியப்பன், சவுந்திரராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் பொருளாளர் சந்திரன் நன்றி கூறினார்.
ஓய்வூதியம்
இந்த ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய ஆணை 2-ஐ ரத்து செய்ய வேண்டும். மின்வாரியம் தன்னாட்சி கொண்ட பொதுத்துறையாக தொடர வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசுகளுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்க வேண்டும். ஒப்பந்த பணிகாலத்தை கணக்கில் எடுத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில், ஆண்கள் சட்டை அணியாமலும், பெண்கள் கருப்பு முக கவசம் அணிந்தபடியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.