

அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். துணை தலைவர் பூபாலசந்திரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தாசில்தார் ஸ்ரீதரன், துணை தலைவர் ராஜேஷ்பாபு, மத்திய செயற்குழு உறுப்பினர் ரத்தினக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளான வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட தலைவர் பார்த்திபன் நன்றி கூறினார்.