விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 6-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி அறிவிப்பு

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 6-ந்தேதி திராவிடர் கழகம் சார்பில் அனைத்துக் கட்சிகளை ஒன்றிணைத்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கி.வீரமணி தெரிவித்தார்.
விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 6-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி அறிவிப்பு
Published on

அனைத்துக் கட்சி கூட்டம்

மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு விஸ்வகர்மா யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் குறித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடலில் நேற்று அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் வீரபாண்டியன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன் உள்ளிட்ட 12 கட்சிகள் கலந்து கொண்டன.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு அண்மையில் விஸ்வகர்மா யோஜனா என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 18 வகையானவர்கள் அவர்களின் சாதி தொழில்களை செய்யும் வகையில் ஊக்கம் அளிப்பதாகக் கூறி ரூ.13 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை பெறுவதற்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் 18 வயது முடிந்த பிள்ளைகளை கல்லூரியில் படிக்க விடாமல் பரம்பரை சாதி தொழிலையே செய்ய தூண்டும், குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். இது குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகும்.

கல்வி உரிமை மறுக்கப்பட்ட பிள்ளைகளை கல்வியில் உயர்நிலை எட்டுவதைத் தடுத்து நிறுத்தி 18 வயது அடைந்தவுடன் அவர்களைப் பரம்பரை சாதி தொழிலை நோக்கி நகர்த்தும் இந்த திட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவே, இந்த திட்டத்தை எதிர்த்து சமூகநீதிக் கொள்கை சார்ந்த கட்சிகள் ஒன்றுசேர்ந்து வரும் செப்டம்பர் மாதம் 6-ந்தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com