

சென்னை,
கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், பணிமனை மற்றும் சைதாப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுரங்கரெயில் பாதைக்கான பணிகள் நடக்கும் அனைத்து இடங்களிலும் டெங்கு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
இதில் டெங்கு நோய் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, தொழிலாளர்கள் மத்தியில் டெங்கு நோய் ஒழிப்பு மற்றும் சுகாதாரப்பணிகள் மற்றும் நிலவேம்பு கசாயத்தின் பயன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நோய் குறித்த விழிப்புணர்வு வீடியோ படக்காட்சியும் திரையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
முகாமில் டெங்கு நோய் குறித்து தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பணி நடக்கும் இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வதுடன், சுத்தமாகவும் வைத்திருக்கவும் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் செய்திருந்தனர்.