

சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று (04.10.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசுச் செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-109க்குட்பட்ட, கிழக்கு நமசிவாயபுரம், 3ஆவது தெருவில் நடைபெற்ற காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினையும், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொசு ஒழிப்பு உள்ளிட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகளையும், பார்வையிட்டு ஆய்வு செய்து, வீடு, வீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
மேலும், இப்பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் டிரோன் மூலம் கொசுப்புழுக்கள் நாசினி மருந்து தெளித்தல் பணி நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையாளர்கள் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், (சுகாதாரம்), எச்.ஆர்.கௌஷிக் (மத்திய வட்டாரம்), மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசுச் செயலாளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
பெருநகர சென்னை மாநகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணிகளை இன்று பார்வையிட்டோம். சென்னை மாநகராட்சிப் பகுதியில் டெங்கு நோயாளிகள் இந்த ஆண்டில் இதுவரை 4,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த இறப்புகளும் நிகழவில்லை. மொத்த பரிசோதனைகள் 16,254, பெருநகர சென்னை மாநகராட்சியில் செப்டம்பர் மாதத்தில் டெங்கு பாதிப்பு 1,293, கொசு ஒழிப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை 3,703, மருத்துவ முகாம்கள் தினமும் 100-க்கும் மேலான மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
கொசுப்புழு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் 1,250 . முழுவீச்சில் இந்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனை இன்று நாங்கள் பார்வையிட்டோம். எல்லா இடங்களிலும் இந்த கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வுப் பணிகள் சென்னை மாநகராட்சியில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பொதுவாக டெங்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறதா? இப்போது 20,000-த்தை எட்டுவதாகச் சொல்கிறார்களே?
20,000 ஆகியிருக்கிறது. இப்போது நாம் அனைத்துக் காய்ச்சல் பாதிப்புகளையும் பரிசோதிக்கிறோம். நமக்கு நோய் மேலாண்மைதான் முக்கியம். அதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு மேலாண்மை செய்வது மிகவும் முக்கியமான விஷயம். அதனால் அனைத்துக் காய்ச்சல் பாதிப்புகளையும் பரிசோதனை செய்யச் சொல்லியிருக்கிறோம்.
கட்டாயமாக நாம் எல்லாவற்றையும் பரிசோதனை செய்து மேலாண்மை செய்ய வேண்டும். டெங்குவைப் பொறுத்தவரை காய்ச்சல் குறைகின்ற நேரத்தில் அபாயம் அதிகமாக இருக்கும். அதையெல்லாம் கவனித்து, திரவப் பராமரிப்பு மேலாண்மையை மிக முக்கியமான ஒன்றாகச் சுகாதாரத் துறை பார்த்துக்கொண்டு வருகிறது..
டெங்கு பாதிப்பு இந்த வருடம் அதிகமாக இருக்க என்ன காரணம்?
பருவகால மாறுபாட்டின் காரணமாக டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். அதை நாம் எவ்வாறு மேலாண்மை செய்து எண்ணிக்கையைக் குறைக்கிறோம் என்பதுதான் முக்கியம். இப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியது போல, பாதிப்பு சீராகி, குறைந்து, நிலைபெற்றுள்ளது. இந்த முழுவீச்சவிலான பணிகள் நடைபெறுவதால் நிலைமையைச் சீராக்க முடிந்தது.
அனைத்துத் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவை எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும் என்பதற்கான அனைத்து விதமான தயார்நிலையிலும் தமிழ்நாடு முழுவதும் தயாராக இருக்கிறோம்.
தூய்மைப்படுத்தும் பணியில் விதிக்கப்படும் அபராதங்கள் குறித்துக் கூற முடியுமா?
சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு மாதத்திலேயே ரூபாய் 7.2 லட்சம் அபராதம் விதித்துள்ளோம். வணிக நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பலமுறை கூறியும் குப்பைகளை அகற்றாத சில வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளால் பொதுமக்கள் மிக விழிப்புணர்வோடு ஒத்துழைப்பு தருகிறார்கள். தாழ்வான பகுதிகள், குப்பை கொட்டும் இடங்கள் மற்றும் காலியிடங்களை அவர்களே சுட்டிக்காட்டுகிறார்கள். கொசுப்புழு உற்பத்தி ஆகும் கொள்கலன்களை அகற்றும் போது அவர்களுக்கே காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
சுகாதாரத்துறைச் செயலாளர் கூறியபடி சென்னை மாநகராட்சியில் டெங்கு பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்றைய தினம் 46, அதற்கு முந்தைய தினம் 39 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இருப்பினும், பணிகளின் தீவிரத்தைக் குறைக்காமல் தொடர்ந்து தீவிர டெங்கு ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்தக் காலகட்டத்தில் இடைவெளிவிட்டு பெய்யும் மழையினால் நன்னீரில் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே, வரும் பருவமழையை முன்னிட்டுப் பணிகள் தொடரும். நுங்கம்பாக்கம் கால்வாய் தூர்வாரப்படுவதைப் போல, 44 கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளும், ட்ரோன்கள் மூலம் உயிரியல் தீர்வு முறைகளும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மழைநீர் வடிகால்கள் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனவா ?
சென்னை மாநகரப் பகுதியில் 3,000 கி.மீ-க்கும் அதிகமான மழைநீர் வடிகால்களும், நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் 250 கி.மீ வடிகால்களும் என மொத்தம் 3,300 கி.மீ மழைநீர் வடிகால்கள் உள்ளன. இதில் அடைப்புள்ள 1,600 கி.மீ பகுதியில் 1,400 கி.மீ தூர்வாரப்பட்டுவிட்டது. மீதமுள்ள 200 கி.மீ பணிகள் இந்த வாரத்திற்குள் முடிவடையும். 99% பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
2028 வரை செல்லும் நீண்டகாலத் திட்டங்களான கோவளம் நீர்ப்பிடிப்புப் பகுதி பணிகளில், முன்னுரிமைப் பணிகளை இந்த அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். நீர்வளத் துறை, மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத் துறை போன்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.
இந்த ஆண்டு 'சூப்பர் எல் நினோ' என்பதால் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் அலை ஏற்றம் போன்ற நேரங்களில் தண்ணீர் உள்வாங்க தாமதமானால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்காக பயன்படுத்த 215 நிவாரண மையங்களும், 111 ஒருங்கிணைந்த சமையலறைகளும் தயார் நிலையில் உள்ளன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி 15 மண்டல அலுவலர்களாக இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகளும், 7 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
மாநகராட்சிப் பணிகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏதேனும் இருக்கிறதா ?
மாநகராட்சியின் பொதுவான நிதி நிலையில் சில குறைபாடுகள் இருந்தன. இருப்பினும், தமிழக அரசு நிலுவைக் கட்டணங்களைத் தீர்க்க ரூ.1,100 கோடியும், கடனாக ரூ.300 கோடியும் ஒதுக்கியுள்ளது.
பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளுக்காக முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி, அதற்கான பணிகள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, பருவமழைப் பணிகளுக்கு எந்த நிதிப் பற்றாக்குறையும் இல்லை. நீண்டகால மூலதனப் பணிகளுக்கு உலக வங்கி மற்றும் ‘ஜைக்கா' (JICA) போன்ற வெளிநாட்டு நிதி உதவித் திட்டங்கள் மூலம் பணிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளோம். எனத் தெரிவித்தனர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.