

ஆலந்தூர்,
சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலுக்கு காரில் இளைஞர் ஒருவர் வந்தார். ஒட்டலில் உள்ள மதுபான பாருக்கு சென்ற போது அங்கிருந்த ஊழியர்கள் வயது குறைவாக இருப்பதால் மது அருந்த அனுமதிக்க முடியாது என கூறி உள்ளனர். உடனே அந்த இளைஞர் சத்தம் போட்டார்.
பின்னர் காரை வேகமாக எடுத்து கொண்டு வெளியே வந்தார். வெளியே வந்த வேகத்தில் இரும்பு கேட்டை உடைத்து கொண்டு சாலையின் நடுவே சென்று நிறுத்தினார். இதனால் மீனம்பாக்கம் நோக்கி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது காரில் காயம் அடைந்து இருந்த சென்னை முகப்பேரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ்(19) என்பவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் இரும்பு கேட்டுடன் இருந்த காரை பொக்லைன் உதவியுடன் போலீசார் அகற்றினார். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.