தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்பை மறுப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாகவும், அரசு இதில் வேடிக்கை பார்க்கக்கூடாது என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்பை மறுப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு 3,209 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி வெளியிட்டது. அதே ஆண்டில் நவம்பர் மாதத்தில் கணினி வழித்தேர்வுகள் நடத்தப்பட்டன.

தேர்வைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 10 மற்றும் 13-ந்தேதிகளில் வெளியிடப்பட்ட இடைக்காலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 400-க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

அக்டோபர் மாதம் 12, 13, 14-ந்தேதிகளில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவர்கள் அழைக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டிருக்கவேண்டும்.

பணி வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது

ஆனால், தமிழ்வழியில் படித்த ஏராளமானோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படவில்லை. அதன் வாயிலாக தமிழ்வழியில் படித்தோர்களுக்கு எந்தகாரணமும் இல்லாமல் ஆசிரியர் பணிவாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்திருக்கும் விளக்கம் எவ்வகையிலும் ஏற்கமுடியாதது.

வினாக்களுக்கான விடைகளில் காணப்பட்ட குளறுபடிகளை சுட்டிக்காட்டி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வழக்குத்தொடர்ந்தவர்களின் எண்ணிக்கைக்கு இணையான பணியிடங்களை காலியாக வைத்திருக்க ஆணையிட்டிருந்தது. அதைக்காரணம் காட்டி, 56 பணியிடங்களை மட்டும் நிரப்பாமல் விட்ட தேர்வுவாரியம், மீதமுள்ள பணிகளை நிரப்பிவிட்டது. அதில், தமிழ்வழிக்கல்வி படித்தவர்களுக்கான 20 சதவீதம் இடஒதுக்கீடு முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை.

வேடிக்கை பார்க்கக்கூடாது

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்த நாளிலிருந்து 4 வாரங்களில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணி வழங்கியிருக்கவேண்டும். ஆனால், அதன்பின்னர் 6 மாதங்களாகியும் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப்படுகிறதென்றால், அதை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சிக்கலில் உடனடியாக தலையிட்டு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வழங்கவேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் ஆணையை நிறைவேற்ற ஆணையிடவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com