தமிழக அரசு நடத்தும் போட்டித்தேர்வில் தமிழில் வினாத்தாள் வழங்க மறுப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்

தமிழக அரசு நடத்தும் காவல்துறை கைரேகைப்பிரிவு சார்பு ஆய்வாளர் பணி போட்டித்தேர்வில் தமிழில் வினாத்தாள் வழங்க மறுப்பதா? என்று டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நடத்தும் போட்டித்தேர்வில் தமிழில் வினாத்தாள் வழங்க மறுப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகக் காவல்துறையின் கைரேகைப் பிரிவுக்கு 202 சார்பு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். போட்டித்தேர்வு ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும், தமிழில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்றும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கூறியிருக்கிறது. தேர்வு வாரியத்தின் இம்முடிவு தேர்வர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தமிழ்நாட்டில் தமிழக அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழியில் வினாத்தாள்களை வழங்க மறுப்பது தமிழ் மொழி பேசும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இது கண்டிக்கத்தக்கது.

காவல்துறை சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் நடத்தப்பட்டால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். ஆங்கில வழியில் படித்த, தமிழகத்தில் வாழும் பிற மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் வழியில் படித்த, தமிழ் பேசும் பட்டதாரிகள் இந்தப் பதவிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே திட்ட மிட்டு இவ்வாறு செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

கைரேகைப்பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இன்னொரு அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப்பணிகளில் 20 சதவீத இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால், கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் நியமனத்தில் இந்த ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எதிரான சதியை இது உறுதி செய்கிறது.

தமிழக அரசு தமிழில் படித்தவர்களின் உரிமைகளை பறிப்பதை ஏற்க முடியாது. எனவே, கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வை தமிழ் மொழியில் நடத்தவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com