சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தெற்கு வட்டார துணை ஆணையர் ஆய்வு..!

நீர்நிலைகளை தூர்வாரி மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தெற்கு வட்டார துணை ஆணையர் ஆய்வு..!
Published on

சென்னை,

வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ஆதம்பாக்கம் ஏரியில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

மழைநீர் வடிகால் பணிகள்

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள், மழைநீர் வடிகால், கால்வாய்கள் ஆறுகளில் தூர்வாருதல், மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத இடங்களில் இணைப்பினை ஏற்படுத்துதல், நீர்நிலைகளில் தூர்வாரி மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நந்தம்பாக்கம் வடிகால்வாய், ஆதம்பாக்கம் ஏரியில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல் இன்று (30.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தெற்கு வட்டார துணை ஆணையர் ஆய்வு

வளசரவாக்கம் மண்டலத்தில், ஆற்காடு சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திடவும், வார்டு-153க்குட்பட்ட மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளைத் தொடர்ந்து, இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் இணைப்பு ஏற்ப்படுத்துவது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இணைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வார்டு-155க்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய் சேருமிடமான நந்தம்பாக்கம் கால்வாயினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இக்கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் தூர்வாரிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

இதனைத் தொடர்ந்து, ஆலந்தூர் மண்டலம், வார்டு-162க்குட்பட்ட வேளச்சேரி உள்வட்டச் சாலையில் உள்ள ஆதம்பாக்கம் ஏரி அருகில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் பாலப்பணிகளையும், அப்பகுதியில் உள்ள மழைநீர் ஆதம்பாக்கம் கால்வாயில் சேரும் வகையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளுதல் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆதம்பாக்கம் ஏரியில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com