சவுமியா அன்புமணியின் பேச்சுக்கு துணை சபாநாயகர் பாராட்டு

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், அது தவெக அரசால்தான் சாத்தியமாகும்.
சவுமியா அன்புமணி
Published on

சென்னை:

சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சவுமியா அன்புமணியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என துணை சபாநாயகர் ரவிசங்கர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மதுவிலக்கு தொடர்பாக சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. பேசுகையில், குடும்பங்களின் பொருளாதாரத்தை டாஸ்மாக் மதுபான விற்பனை பாதிப்பதாக குற்றம் சாட்டி அவர் கூறியதாவது:-

பெண்களின் சுதந்திரத்தையும், குடும்பங்களின் பொருளாதார நிலையையும் டாஸ்மாக் பாதிக்கிறது. 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் ரூ.789.95 கோடிக்கும், 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரூ.725.56 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளின் கல்வி, மகள்களின் திருமணம், வீடு கட்டுதல் போன்றவற்றுக்காக குடும்பங்கள் சேமிக்க வேண்டிய பணம் மதுபானத்துக்காக செலவிடப்படுகிறது. எனவே, மதுவிலக்கை குறைந்தபட்சம் கொள்கையாகவாவது அரசு அறிவிக்க வேண்டும்.

மிகப்பெரிய சாதனை

மேலும், மதுவிலக்குக்காக பா.ம.க. மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் மூலம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தவெக அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே 717 மதுக்கடைகளை மூடுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டது மிகப்பெரிய சாதனை என்றும் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

துணைசபாநாயகர் பாராட்டு

இதைத்தொடர்ந்து பேசிய பேரவை துணைசபாநாயகர் ரவிசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சவுமியா அன்புமணியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அவர் சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக பேசுவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், மதுவிலக்கு தொடர்பாக கையெழுத்திட கடந்த கால அரசுகள் தயக்கம் காட்டின. தவெக அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள்தான் கடந்துள்ளன. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், அது தவெக அரசால்தான் சாத்தியமாகும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com