சிலிண்டர் கட்டுப்பாடு நீக்கம்... விலை குறையாததால் வணிகர்கள் கவலை...

சிலிண்டர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் இனிமேல் ஓட்டல்களில் அனைத்து உணவு பொருட்களையும் தயாரித்து வழங்க முடியும்.
வணிக சிலிண்டர் விலை உயர்வு
Published on

சென்னை,

அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. போரின் உச்சமாக, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், கியாஸை கொண்டு செல்லக்கூடிய கப்பல்கள் கடக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதில் இருந்து பிரச்சினை இன்னும் தலைவிரித்தாடி வந்தது. இதில் கச்சா எண்ணெய், கியாஸை எதிர்பார்த்து இருக்கும் இந்தியா பெரும் பிரச்சினையை சந்தித்து வந்தது.

சில உணவு பண்டங்கள் தயாரிப்பு நிறுத்தம்

எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகள் உணவக தொழிலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வணிக சமையல் எரிவாயு விலை ஏற்றத்தால் ஏற்பட்ட இந்த நெருக்கடியை சமாளிக்க உணவகங்கள் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டிய நிலை உருவானது.

மூலப்பொருட்களின் விலை மற்றும் எரிபொருள் செலவுகளை ஈடுகட்ட ஓட்டல் உணவு பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டன. மேலும் செலவை கட்டுப்படுத்தவும், லாபத்தை நிலைநிறுத்தவும் குறிப்பிட்ட சில உணவு பண்டங்கள் தயாரிப்பதை உணவகங்கள் தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ நிறுத்த வேண்டியதாயிற்று.

விலை உயர்வு

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் தனியாரிடம் அதிக விலை கொடுத்துப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. இதனால் இந்த கூடுதல் செலவுகளைச் சமாளிக்க, ரூ.10-க்கு விற்கப்பட்டு வந்த டீ மற்றும் காபியின் விலையை முறையே 15 ரூபாய் மற்றும் 25 ரூபாயாக உயர்த்தி விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை ரூ. 3,327 ஆக மத்திய அரசு உயர்த்தியது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் தங்களின் வாடகை, தொழிலாளர் சம்பளம் மற்றும் இந்த எரிபொருள் செலவை ஈடுகட்ட, உணவுப் பண்டங்களின் விலையை 10% உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

மகிழ்ச்சி

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்திற்குப் பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை குறிப்பிடத்தக்க அளவு சரிந்துள்ளது. இது ஓட்டல் மற்றும் டீக்கடைத் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் கூட, வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்படாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பு கூறியதாவது:-

விலை குறைய வாய்ப்பில்லை

வணிக சிலிண்டர் விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. போருக்கு முன்னதாக 2,000 ரூபாய்க்கு குறைவாக இருந்த சிலிண்டர், தற்போது ரூ. 3,500 வரை உயர்ந்துள்ளது. சிலிண்டர் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதே நேரத்தில் விலையையும் குறைக்க வேண்டும். இந்த விலை உயர்வால் ஓட்டல் உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலையைக் குறைப்பதற்கு வாய்ப்பில்லை. தற்போதைக்கு 10 சதவீதம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தடையின்றி தயாரித்து வழங்க முடியும்

தற்போது சிலிண்டர் மட்டுமில்லாது, ஓட்டல் தொழில் சார்ந்த அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பதால் இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி, பொங்கல், வடை, மதிய சாப்பாடு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையை குறைக்க இயலாது. சிலிண்டர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், இனிமேல் ஓட்டல்களில் அனைத்து உணவு பொருட்களையும் தடையின்றி தயாரித்து வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறீனார்.

புதிய சவால்

கடந்த 4 மாதங்களாக நிலவிய கடுமையான தட்டுப்பாட்டால், அரசு நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் தங்களது நிரந்தர வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர். வணிகத்தை பொறுத்தவரை இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்ப்பது ஒரு புதிய சவாலாகும்.

வணிகத்தை மீட்டெடுக்க வேண்டியுள்ளது

ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகள் தங்களின் அன்றாட வணிகத்தை நிறுத்த முடியாது என்பதால், தட்டுப்பாடு நிலவிய காலத்தில் தனியார் நிறுவனங்களின் சிலிண்டர்களுக்கு மாறினர். கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது சிலிண்டர்கள் தாராளமாக கிடைத்தாலும், விநியோகஸ்தர்கள் மீண்டும் நேரடியாக வாடிக்கையாளர்களை சந்தித்து, தடையற்ற விநியோகத்தை உறுதி அளித்து, வணிகத்தை மீட்டெடுக்க வேண்டியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com