வெறிச்சோடிய சென்னை விமான நிலையம்... பயணிகள் இன்றி காணப்படும் உள்நாட்டு முனையம்

விமானங்கள் ரத்து, டிக்கெட் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இண்டிகோ விமான சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 6 நாட்களாக விமான சேவையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பல்வேறு இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
குறிப்பாக கடந்த 2 நாட்களாக குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்பட்டு வருவதால் விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தின் 1-வது உள்நாட்டு முனையம் இன்று பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. விமானங்கள் ரத்து, டிக்கெட் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகவும், ஓரிரு நாட்களில் விமான சேவைகள் சீரான பிறகு விமான நிலையம் மீண்டும் பரபரப்பாக இயங்கும் எனவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






