அரசு எச்சரிக்கையை மீறி லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலை போகும் உள்ளாட்சி பதவிகள்

அரசு எச்சரிக்கையை மீறி பல இடங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கான இடங்களை ஏலத்தில் விடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அரசு எச்சரிக்கையை மீறி லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலை போகும் உள்ளாட்சி பதவிகள்
Published on

சென்னை

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடை பெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பில்லாமல் தேர்தல் நடைபெறவுள்ளது.

308 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 5 ஆயிரத்து 605 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கிடையே கிராம ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின்

பதவிகள் ஏலத்தில் விடப்படுவதாகவும், கூடுதல் விலையை கொடுப்பவர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களாக நியமிக்கப்பட இருப்பதாகவும் பரபரப்பான தகவல் பரவியது. இது தொடர்பான வீடியோக்களும், வெளியானது.

இதனை தொடர்ந்து உள்ளாட்சி பதவிகளை ஏலத்தில் எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

இருப்பினும் இந்த எச்சரிக்கையை மீறி பல இடங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கான இடங்களை ஏலத்தில் விடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள இரண்டு ஊராட்சிகளில் தலைவர் பதவி அதிகபட்சமாக 60 லட்சம் ரூபாய் மற்றும் 10 சென்ட் நிலத்திற்கும் ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஊராட்சிதலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கும், துணைத்தலைவர் பதவி ரூ.15 லடசத்துக்கும் ஏலம் விடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேனி மாவட்டம் அய்யம்பட்டி ஊராட்சியில் 4 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 6 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு தலைவர் பதவி (பொது) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தலைவர் பதவி ரூ.5 லட்சத்திற்கும், துணை தலைவர் பதவி ரூ.1.50 லட்சத்திற்கும் ஏலம் போனது.

வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஏலம் விடப்பட்டது. இதில் ரூ.8.50 லட்சம் வசூலானது. ஆனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அந்த தொகை கிராமக் குழுவிடமே உள்ளது.

தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அய்யம்பட்டி ஊராட்சியில் மீண்டும் ரகசிய ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏலம் எடுத்தவர்களுக்கே பதவிகளை கொடுப்பதா? அல்லது கூடுதல் தொகை நிர்ணயித்து ஏலம் விடுவதா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல மாவட்டத்தில் மேலும் ஒரு சில கிராமங்களிலும் உள்ளாட்சி பதவிகளுக்கு லட்சக்கணக்கில் ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டு ரகசிய கூட்டங்கள் நடந்து வருகிறது.

பதவிகளை ஏலம் விடக்கூடாது என தேர்தல் ஆணையம் விடுத்த எச்சரிக்கையை மீறி ஏலம் விடப்படும் பஞ்சாயத்துக்களை மாவட்ட

கலெக்டர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.

தர்மபுரி மாவட்டம், பொன்னாகரம் அருகேஉள்ள பனைகுளம் ஊராட்சியின் கீழ் பனைகுளம், வத்திமரதஅள்ளி, திருமால்வாடி, கூக்குட்டமருத அள்ளி, மணல் பள்ளம் ஆகிய 5 கிராமங்கள் உள்ளன. மொத்தம் 3 ஆயிரத்து 743 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு முதல் பனைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலத்தில் எடுக்கப்படுகிறது. தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில் இந்த முறையும் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.25 லட்சத்து 30 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறை அதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் இம்மானுவேல் என்பவர் ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எந்த கட்சியையும் சேராத இவர் ஏலம் எடுத்ததால் ஊர் கட்டுப்பாட்டின் படி வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாது. என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும், முருகன் என்பவர் ரூ.35 லட்சத்திற்கு ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் எடுத்து ஊர் பெரியவர்களிடம் பணம் செலுத்தினார். தேர்தல் ரத்து செய்யப்பட்டதும் அவரிடமே பணம் திரும்ப வழங்கப்பட்டது.

இது போல் திருமால்வாடி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் ஊராட்சி தேர்தல் தொடர்பாக அந்த பகுதியினர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விட்டதாக தவறான தகவலை பரப்பியுள்ளனர். அந்த ஊராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் எப்படி பஞ்சாயத்து தலைவராக முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரமாண்டம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவி பெண்கள் பொது பிரிவுக்கு

ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் பெரமாண்டம்பாளையம், முத்தூர், வேட்டுவம்பாளையம், ஆண்டி பாளையம், மேளக்கவுண்டனூர், ராமசாமிக் கவுண்டனூர், ஓலப்பட்டி, நொச்சிப்பட்டி என 8 கிராமங்கள் உள்ளன.

அதில் நொச்சிப்பட்டியை சேர்ந்த ஒருவர் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கு பெரமாண்டபாளையம் ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் எடுத்துள்ளார். இது குறித்தும் அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையை அடுத்த பிஞ்சனூர் பஞ்சாயத்து தலைவர் பதவியை ரூ.16 லட்சத்துக்கு அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் ஏலம் எடுத்து உள்ளதாக சமூகவலை தளங்களில் தகவல் பரவியது. வேப்பூர் வருவாய்துறை அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் தொட் டியம் தாலுகா அரசலூர் கிராமத்தில் 9 வார்டுகள் உள்ளது. இதில் 4-வது வார்டில் அதிக தொகை கொடுப்பவர்களுக்கு வார்டு உறுப்பினர் பதவி என்று அ றி வி க் க ப் ப ட் ட து . தேர்ந்தெடுக்கப்படுபவர் கோவிலுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த பகுதியைச்சேர்ந்த ஒருவர் ரூ.2 லட்சம் நன்கொடை தருவதாக ஒப்புக்

கொண்டார். இதனை அவரது சகோதரர் ஆதாரத்துக்காக செல்போனில் வீடியோ எடுத்தார். இதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. இதனிடையே அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வார்டு உறுப்பினர் பதவியை ஏலம் விடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

4-வது வார்டில் சாலை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லை. உறுப்பினர் பதவியை ஏலம் விட்டால் சரியாக பணிகளை செய்யமாட்டார்கள் என்று அவர்கள் குரல் எழுப்பினார்கள். பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சி தலைவர் பதவியும் ஏலம் விடப்பட்டது-. இதில் ஒருவர் ரூ.22.5 லட்சத்திற்கும், மற்றொருவர் ரூ.25 லட்சத் திற்கு ஏலம் கேட்டனர். ஆனால் உடன்பாடு ஏதும் ஏற்படாததால் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆலம்பாடி ஊராட்சியை சேர்ந்த சொக்கநாதபுரம் செஞ்சேரி கிராமத்தினர் இந்த ஏலத்தை நடத்தினர். ஆலம்பாடி கிராமத்தினரை இதில் சேர்க்கவில்லை. இதையடுத்து ஆலம்பாடி மக்கள் ஏலம் நடந்த இடத்திற்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏலத்தில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

இதற்கிடையே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஏலம் நடைபெற்றது

தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. கடலூர், தர்மபுரி, நாமக்கல், தேனி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com