திருவாரூரில் நாளை ஆழித்தேரோட்டம்; விழா கோலம் பூண்ட நகரம்...!

உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.
திருவாரூரில் நாளை ஆழித்தேரோட்டம்; விழா கோலம் பூண்ட நகரம்...!
Published on

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.

இச்சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேர் பிரசித்து பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெறுமைமிக்கது. ஒவ்வொரு ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் ஆழித்தேரோட்டம் விழா நடைபெறும்.

அலங்கரிக்கப்படதா ஆழித்தேர் உயரம் மற்றும் அகலம் 30 அடி, விமானம் வரை தேர்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி, தேர்கலசம் 6 அடி என மொத்தம் 96 அடி உயரத்தில் மிகப் பிரமாண்டாமாக காட்சி தருகிறது.

தேரோட்டத்தை சீராக இயக்கிட திருச்சி பெல் நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்கள் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது.

இந்த தேரின் முன்பகுதியில் கட்டப்படும் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன்னாகும்.

மிக பிரமாண்டமான ஆழித்தேரின் தியாகராஜர் சாமி வீற்றிருக்க 4 வீதிகளில் வீதியுலா வரும் அழுகும் காண்போர் வியக்கதக்கது. இந்நிலையில் ஆழித்தேராட்டம் நாளை காலை 8.10 மணிக்கு வடம் பிடிக்கப்படுகிறது. அதனுடன் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடிக்கப்படும்.

முன்னதாக காலை 5 மணிக்கு விநயாகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கிறது. ஆழித்தேரோட்ட திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் நகராட்சியின் மூலம் பக்தர்கள் வசதிக்காக நகரின் முக்கிய இடங்கள் மற்றும் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

தேரோடும் வீதிகள் மற்றும் முக்கிய பொது மக்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் 265 துப்பரவு பணியாளர்களை கொண்டு உடனுக்குடன் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நகரில் பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் தொற்றுநோய்கள் பரவா வண்ணம் கிருமிநாசினி, சுண்ணாம்பு தூள் தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். தீயணைப்பு வாகனம் தேருக்கு பின்னாள் தொடர்ந்திட தயார் நிலையில் உள்ளது.

108 ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவ வாகனத்தில் டாக்டர், செவிலியர்கள் மற்றும் மருந்துக்கள் அடங்கிய குழு தயாராக தேரை பின் தொடர்ந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பு, திருட்டு போன்ற சம்பங்களை தடுத்திட சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்கின்றனர்.

எந்தவித அசம்பாவித சம்பவங்களை தடுத்திட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

உலக புகழ் பெற்ற ஆழித்தேரோட்டத்திற்கு பல்லாயிரகணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகமும் சிறப்பாக செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com