தீவிரவாதிகள் தடுப்பு படைகள் அமைப்பு குடியரசு தின விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

சென்னையில் தீவிரவாதிகள் தடுப்பு படைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #Republicday #Chennai
தீவிரவாதிகள் தடுப்பு படைகள் அமைப்பு குடியரசு தின விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
Published on

சென்னை,

குடியரசு தின விழாவில் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததன் எதிரொலியாக, சென்னையில் தீவிரவாதிகள் தடுப்பு படைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் 26-ந் தேதி பிரமாண்டமாக நடைபெறும் குடியரசு தின விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைப்பார்.

மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பி உள்ளது. குடியரசு தின விழாவையொட்டி தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்றும், அதை தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் அடிப்படையில் சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சென்னையில் உள்ள 12 துணை கமிஷனர் சரகங்களிலும் தலா 2 தீவிரவாத தடுப்பு படைகள் வீதம் 24 படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படைகள் ஒவ்வொன்றிலும் தலா ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் சென்னையில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு தனிப்படை லாட்ஜூகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இன்னொரு தனிப்படை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், பஸ்-ரெயில் நிலையங்கள், தனியார் நிறுவனங்களுக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தங்கியிருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நீண்ட நேரமாக அனாதையாக வாகனங்கள் நின்றாலோ, சந்தேகப்படும் வகையில் பொருட்கள் அனாதையாக கிடந்தாலோ போலீசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தனிப்படை போலீசார் பிரசாரம் செய்த வண்ணம் உள்ளனர். வேப்பேரி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான தீவிரவாத தடுப்பு படையினர் நேற்று இதுபோன்ற பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகிறார்கள். குடியரசு தினவிழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com