கேளம்பாக்கம்-திருப்போரூர் வழியாக மாற்றுப்பாதை: மெட்ரோ ரெயில் அதிகாரிகள் பரிசீலனை

சிறுசேரி- கிளாம்பாக்கத்திற்கு பதிலாக கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக மாற்றுப்பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னையில் முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானநிலையம் வரை முதல் வழித்தடத்தில் (நீல வழித்தடம்) 23.085 கிலோ மீட்டர் தூரமும், சென்னை சென்டிரலில் இருந்து பரங்கிமலை வரை 2-வது வழித்தடத்தில் (பச்சை வழித்தடம்) 21.961 கிலோ மீட்டர் தூரம் உள்பட 2 வழித்தடங்களில் 45.046 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்யப்பட்டு ஆக மொத்தம் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக, மாதவரம்- சிறுசேரி வரை 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4-வது வழித்தடமும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் செயல்பட தொடங்கியதால், விமானநிலையம் - கிளாம்பாக்கம் மற்றும் பரந்தூரில் விமானநிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் பூந்தமல்லி- பரந்தூர் மற்றும் கோயம்பேடு- ஆவடிக்கு 2-ம் கட்ட விரிவாக்கப் பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் கோயம்பேடு- ஆவடி, பூந்தமல்லி- பரந்தூர் இடையிலான திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அதேபோல், விமானநிலையம்- கிளாம்பாக்கத்திற்கும் தமிழ்நாடு அரசின் உயர்மட்ட ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளை கணக்கீடு செய்ததில் அலுவலக நேரங்களில் 1 மணி நேரத்திற்கு 14 ஆயிரத்துக்கும் மேல் பயணிகள் பயணிக்க வேண்டும். ஆனால், கிளாம்பாக்கம்- சிறுசேரி திட்டத்தில், அலுவலக நேரத்தில் பயணியர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டவில்லை.

இதனால் இப்போதைக்கு, கிளாம்பாக்கம்-சிறுசேரி மெட்ரோ ரெயில் நீட்டிப்பு திட்டம் கைவிடப்படுவதாக நிர்வாகம் திடீரென அறிவித்துள்ளது. அதேநேரம், கோயம்பேடு-ஆவடி, பூந்தமல்லி- பரந்தூர் இடையே அலுவலக நேரங்களை கணக்கீடு செய்யப்பட்டதில், பயணிகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது.

கிளாம்பாக்கம்- சிறுசேரி மெட்ரோ திட்டம் கைவிடப்படுவது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுசேரியில் 50-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருப்பதால் அவற்றில் பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறுசேரியில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல மெட்ரோ ரெயிலை பயன்படுத்துவார்கள்.

அதேபோல் கிராமப் பகுதிகளில் இருந்து சிறுசேரிக்கு வேலைக்கு வருபவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். இந்தநிலையில் கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக மாற்றுப்பாதையில் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனை செய்யப்படுகிறது. இதுகுறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com