பண மதிப்பிழப்பு: பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

பண மதிப்பிழப்பு பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கே.எஸ். அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
பண மதிப்பிழப்பு: பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்
Published on

சென்னை,

பிரதமர் மோடி பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையை தெளிவு படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "மோடியின் பணமதிப்பிழப்பு திட்டமிட்ட கொள்ளை என்றும், சட்டப்படியான மோசடி என்றும், இதனால் நாட்டிற்குப் பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். அவர் கூறியது போல் இந்திய மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இத்தகைய பேரழிவுமிக்க அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூபாய் 85 லட்சம் கோடியை மீட்டு இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சத்தை டெபாசிட் செய்வோம் என்று தேர்தல் பரப்புரையில் பா.ஜ.க. கூறியது.

ஆனால், இந்தியர்களின் பணம் ரூபாய் 30,500 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக சுவிஸ் வங்கி அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் ?

அக்டோபர் 21, 2022 ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி மக்களிடையே உள்ள மொத்த பணப் புழக்கம் ரூபாய் 30.88 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. ஆனால், பணமதிப்பிழப்பிற்கு முன்பாக நவம்பர் 4, 2016 அன்று பொதுமக்களிடம் இருந்த பணப் புழக்கத்தின் மதிப்பு ரூபாய் 17.7 லட்சம் கோடி.

கடந்த ஆறு ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு மக்களிடையே பணப் புழக்கம் 71.84 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. பிரதமர் மோடி கூறியபடி மக்களிடையே வங்கிப் பரிமாற்றம் எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிப்பதற்கு மாறாக, மக்களிடையே பணப் புழக்கம் பலமடங்கு கூடியிருக்கிறது.

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் 15 லட்சத்து 41 ஆயிரம் கோடியில், ரூபாய் 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி வங்கிகளுக்குத் திரும்பி வந்து விட்டது. ஏறத்தாழ 99.3 சதவிகித மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பி வந்து விட்டன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் ரூபாய் மூன்றிலிருந்து நான்கு லட்சம் கோடி மதிப்புள்ள கருப்புப் பணம் வங்கிகளுக்குத் திரும்ப வராது என்று நம்பிய பிரதமர் மோடிக்கு இது மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு 8 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் திடீரென தோன்றி 500, 1000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்து அறிவிப்பை வெளியிட்டார்.

நாட்டு மக்களை கடும் துன்பத்திற்கு ஆளாக்கிய இந்த அறிவிப்பு, கடந்த ஆறு ஆண்டுகளில் ஏற்படுத்திய விளைவுகளால் அதிர்ச்சியும், வேதனையும் தான் மிஞ்சுகிறது" என்று அதில் கே.எஸ். அழகிரி பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com