தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை பொன்.ராதாகிருஷ்ணன் மலர் அஞ்சலி

பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை பொன்.ராதாகிருஷ்ணன் மலர் அஞ்சலி
Published on

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜை விழா கடந்த 28-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று குருபூஜை விழா நடைபெற்றது.

இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமுதாய தலைவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் ஏராளமான பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி காலை 9.10 மணிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், ராஜேந்திர பாலாஜி, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன், பாஸ்கரன் மற்றும் அன்வர்ராஜா எம்.பி., மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உள்பட பலர் மலர் வளையம் வைத்து தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111-வது ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.க. சார்பில் எனது தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். கடந்த 1979-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவித்தார். அன்று முதல் தற்போது வரை தேவர் ஜெயந்தி விழா அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பசும்பொன் தேவரின் பெயர் சூட்டப்பட்டது.

எம்.ஜி.ஆர். எந்த அளவுக்கு தேவரின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச் சென்றாரோ, அதே வழியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பசும்பொன் தேவரின் புகழை நிலைக்க செய்தார். தேசியமும், தெய்வீகமும் இருகண்கள் என போற்றி வாழ்ந்த தேவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது சிலைக்கு தங்க கவசம் அணிவித்தார். தேவரின் பெருமைகள் தமிழர்களை சென்றடைய அ.தி.மு.க. தொடர்ந்து பாடுபடும். அ.தி.மு.க. பல்வேறு வகைகளில் தேவருக்கு பெருமை சேர்த்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் அரசகுமார், சுரேந்திரன், நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன் உள்பட ஏராளமானோர் தேவர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நாட்டின் ஒற்றுமைக்காகவும், தேசியத்துக்காகவும் பாடுபட்டவர். தேவருக்கு பா.ஜ.க. சார்பில் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. நானும் எல்லா வருடமும் பசும்பொன்னுக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறேன். தேவரின் வழியில் இந்திய நாட்டை முதன்மையாக மாற்றி உலகஅளவில் முதல் நாடாக கொண்டுவர பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார். தேவரின் வழித்தடத்தில் மோடி பயணிக்கிறார் என்று கூறினார்.

எச்.ராஜா கூறும்போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி கிராமத்தில் உள்ள மக்கள் நன்கு அறிந்திருப்பதற்கு காரணம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்தான் என்று தெரிவித்தார்.

ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தங்க தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அதன் நிறுவனர் கருணாஸ் எம்.எல்.ஏ., தே.மு.தி.க. சார்பில் கேப்டன் மன்ற மாநில செயலாளர் செல்வ அன்புராஜ் ஆகியோரும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com