தேவரின் தங்க கவசம்: திண்டுக்கல் சீனிவாசன் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து விழா கமிட்டியிடம் ஒப்படைத்தார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு தங்க கவசத்தை அதிமுக கழகபொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பசும்பொன் கோயில் டிரஸ்டியிடம் ஒப்படைத்தார்.
தேவரின் தங்க கவசம்: திண்டுக்கல் சீனிவாசன் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து விழா கமிட்டியிடம் ஒப்படைத்தார்
Published on

மதுரை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டும், 61-வது குருபூஜையை முன்னிட்டும் வருகின்ற 28-ந்தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்று மரியாதை செய்கிறார்கள்.

இதனிடையே தேவர் சிலையில் அணிவிக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுமார் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அதிமுக சார்பில் வழங்கினார். இந்த தங்க கவசம் தேவர் ஜெயந்தியின் போது பயன்படுத்தும் வகையில் அதிமுக பொருளாளர் பெயரில் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.

தங்க கவசம் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த 10.10.2023 அன்று அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தேவர் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதனையொட்டி மதுரை அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வங்கி மேலாளர் முன்னிலையில் கையெழுத்திட்டு தங்க கவசத்தை பெற்ற அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தேவர் குரு பூஜை விழாவிற்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய டிரஸ்டி காந்திமீனாளிடம் ஒப்படைத்தார். 

இதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் தங்க கவசம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்குள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் உள்ள தேவரின் சிலைக்கு இந்த தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது.

தேவர் ஜெயந்தி விழா நிறைவடைந்ததும் அந்த தங்க கவசத்தை மீண்டும் இதே வங்கியில் லாக்கரில் வைக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com