

ஈரோடு,
ஈரோடு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு ரெயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இங்கு 4 நடைமேடைகள் உள்ளன. சுரங்கப் பாதை வழியாக பயணிகள் சென்று நகரும் படிக்கட்டில் ஏறி நடைமேடைக்கு சென்று வருகின்றனர். இதனால் ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் இருந்து அனைத்து நடைமேடைகளுக்கும் செல்லும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதற்கிடையில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஈரோடு ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.38 கோடியே 9 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம், நிலைய விரிவாக்க பணி, நடைமேடை சீரமைக்கும் பணி, வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இதில் வாகன நிறுத்துமிடம் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. புதிதாக நுழைவாயில் வளைவும் அமைக்கப்பட்டு உள்ளன. நடைமேம்பாலம் அமைக்கும் பணி தற்போது 80 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளது. மேலும் நடைமேம்பாலத்தில் ஏறி செல்வதற்கு வசதியாக படிக்கட்டு, 'லிப்ட்' மற்றும் நகரும் படிக்கட்டு போன்றவை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கான எந்திரங்கள் ரெயில் நிலைய வளாக பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் ரெயில் நிலையத்தின் முன்புள்ள பழைய கட்டிடம் இடிக்கும் பணியும் தற்போது வேகமாக நடந்து வருகிறது. பாதுகாப்பாக இந்த பணிகள் நடைபெற்றாலும், ரெயில் நிலையத்துக்குள் செல்லும் பயணிகள் ஒருவித அச்சத்துடன் உள்ளே சென்று வருகின்றனர். பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக காத்திருப்போர் அறை, டிக்கெட் கவுன்டர், அதிகாரிகள் அலுவலகங்கள் போன்றவை கட்டப்பட உள்ளதாகவும், அனைத்து பணிகளும் 8 மாதங்களில் முடிக்கப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.