சித்திரைத் திருவிழாவில் பக்தர் உயிரிழப்பு

கோவிலுக்கு வந்திருந்த பக்தர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மதுரை,
'கோவில் மாநகர்' என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சிறப்புமிக்க சித்திரைத்திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதனைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் கூட்டத்தில் இருந்த பூமிநாதன் (45) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருப்பினும் பூமிநாதன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.






