அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் - கிரிவலமும் சென்றனர்

மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் - கிரிவலமும் சென்றனர்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவிலில் நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் காலை முதல் மதியம் வரை பல்வேறு வண்ண மலர்களால் சாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் கூட்டம் அதிகரித்ததால் நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு முதல் அதிகாலை வரை 4 கால பூஜைகளும் நடைபெற்றன.

நள்ளிரவு 12 மணிக்கு சாமி சன்னதியின் பின்பகுதியில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.

ராஜகோபுரத்தின் முன்பு திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வரம் தவில் இசை சங்கம் சார்பில் உலக அமைதிக்காக தலைவர் பிச்சாண்டி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நேற்று காலை 5 மணி முதல் இன்று அதிகாலை 5 வரை விடிய, விடிய நடைபெற்றது.

அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் கிரிவலம் சென்ற கூட்டம் குறைந்து காணப்பட்டது. மாலையில் கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com