தசரா விழாவுக்கு மாலையணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.
குலசேகரன்பட்டினம்,
இந்தியாவில் கர்நாக மாநிலம் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்த படியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.
இந்த விழாவில் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
இத்தகையை சிறப்புபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது. மொத்தம் 12 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
தொழில், வேலைவாய்ப்பு, திருமண தடங்கல் நிவர்த்தி, தீராத நோய்கள், போன்ற பல்வேறு பிரச்சினைகள் நீங்க வேண்டி பக்தர்கள் வேடமணிந்து காணிக்கை வசூலித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
ராஜா, ராணி, போலீஸ், பெண் வேடம், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, புலி, கிரிக்கெட் வீரர் போன்ற வேடம் அணிபவர்கள் 10 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
விநாயகர், பார்வதி, பரமசிவன், அம்மன், கிருஷ்ணன், முருகன், ராமன், பண்டாரம் போன்ற சுவாமி வேடங்கள் அணிபவர்கள் 21 நாட்கள் விரதம் இருப்பார்கள்.மிக முக்கியமான காளி வேடம் அணிபவர்கள், தீச்சட்டி எடுப்பவர்கள் 61, 41, 31, 21 நாட்கள் என தங்கள் சூழ்நிலைக்கேற்ப விரதம் இருக்க தொடங்குவார்கள்.
காளி வேடமணியும் ஏராளமான பக்தர்கள் நேற்று காலை முதல் கடலில் நீராடிவிட்டு, கடற்கரையில் விற்கும் துளசி மாலையை வாங்கிக்கொண்டு முத்தாரம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு பட்டர் ஐய்யப்பனின் கையால் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.விரதம் இருப்பவர்கள் தினமும் காலை, இரவில் இளநீர், மதியம் மண் பானையில் சமைக்கப்பட்ட பச்சரிசி சோறு, தாளிக்காத பருப்பு கலந்த உணவு சாப்பிடுவார்கள்.
காளி வேடத்தில் 100 சடை, 200 சடை முடி என அணியும் பக்தர்கள் தனியாக தென்னை ஓலையில் குடில் அமைத்து, அதில் முத்தாரம்மன் படம் வைத்து அலங்கரிப்பார்கள். அங்கு தாங்கள் வேடம் அணிய பயன்படுத்தும் பொருட்களை வைத்து தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜை செய்து வழிபடுவார்கள். திருவிழாவையொட்டி ஏராளமான ஊர்களில் தசரா குழுக்கள் சார்பில் காளி பிறை அமைக்கப்பட்டு வருகிறது.






