பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

தொடர் விடுமுறை எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
Published on

பழனி முருகன் கோவில்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வாரவிடுமுறை, மாத கார்த்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பழனியில் பக்தர்கள் கூட்டம் இருமடங்கு காணப்படுவது வழக்கம். அந்தவகையில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதன்படி நேற்றும் பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

4 மணி நேரம் காத்திருப்பு

ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு படையெடுத்ததால் கிரிவீதி, சன்னதி வீதி, திருஆவினன்குடி ஆகிய இடங்கள் ஸ்தம்பித்தது. மேலும் பக்தர்கள் முடிக்காணிக்கை நிலையத்திலும் கடும் கூட்டம் காணப்பட்டது.

இதேபோல் பாத விநாயகர் கோவில் முன்பு பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அடிவாரம் பகுதி திக்குமுக்காடியது. மலைக்கோவில் செல்லும் பிரதான வழிகளான படிப்பாதை, யானைப்பாதைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மின்இழுவை ரெயில் வழியாக மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் ரெயில்நிலையத்தில் குவிந்தனர். இதனால் டிக்கெட் கவுண்ட்டரை கடந்து, கிரிவீதி வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

மலைக்கோவிலில் உள்ள பொது, கட்டளை, கட்டண தரிசன வழிகளிலும் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதற்கிடையே பழனி மலைக்கோவிலில் நேற்று இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெற்றது. இதில் 264 பேர் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்க ரதம் இழுத்து வழிபட்டனர்.

பக்தர்கள் அவதி

பழனி முருகன் கோவிலுக்கு விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை பலமடங்கு காணப்படும். அப்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணியிலும் போலீசார் ஈடுபடுவார்கள். ஆனால் நேற்று போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டனர். எனவே தொடர் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com