

திருச்செந்தூர்,
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருவதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
அதேபோல் கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட முக்கிய திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதற்காக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இன்று முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தைப்பூசத் தினமான நேற்று வராத பக்தர்கள் இன்று திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.