

காரைக்கால்,
திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற சனிபகவான் கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்கப்படி சனிபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா கடந்த 27-ந் தேதி கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சனிப் பெயர்ச்சிக்கு பிறகு வந்த முதல் சனிக்கிழமையான நேற்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் தேவையான ஏற்பாடுகள் செய்திருந்தது. நேற்று அதிகாலை முதல் பகல் 11 மணி வரை சுமார் 11 ஆயிரம் பக்தர்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்து இருந்தனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரினம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சானிடைசர், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே கோவிலுக்கு அனுமதித்தனர். நேற்று மாலை வரை சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று காலை கர்நாடகா மாநில துணை முதல்-மந்திரி அஸ்வந்த் நாராயணன் சனிபகவான் கோவிலுக்கு வந்தார். அவரை, மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் சனிபகவான் சன்னதிக்கு சென்று சாமிதரிசனம் செய்து திரும்பினார். கன்னட நடிகர் யஷ் உள்பட முக்கிய பிரமுகர்களும் சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா தொற்று காரணமாக, நளன் குளத்தில் புனித நீராட பக்தர்களை கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. வருகிற 9-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஆன்லைனில் முன் பதிவு அவசியம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் முகவரி - thirunallarutemple.org ஆகும். முன்பதிவு செய்யாத யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விழா ஏற்பாடுகளை, மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், கந்தசாமி தம்பிரான் சாமிகள் ஆகியோர் செய்துள்ளனர்.