பழனி முருகன் கோவிலில் செல்போன்களை ஒப்படைத்து சென்ற பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில், செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய கட்டண சீட்டு வழங்கப்பட்டது.
பழனி முருகன் கோவிலில் செல்போன்களை ஒப்படைத்து சென்ற பக்தர்கள்
Published on

செல்போனுக்கு தடை

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இங்குள்ள மூலவர் சிலை நவபாஷணத்தால் ஆனது. பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான இந்த கோவிலில், தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் செல்போன், கேமரா கொண்டு படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சிலர் செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பக்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, பழனி முருகன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இதன் எதிரொலியாக, அக்டோபர் 1-ந்தேதி முதல் பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முதல் பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

புகைப்படத்துடன் கட்டண சீட்டு

இதற்கிடையே பக்தர்கள் தாங்கள் கொண்டு செல்லும் செல்போன்களை பாதுகாப்பதற்காக பாதவிநாயகர் கோவில் பகுதி, மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.அதன்படி செல்போன் பாதுகாப்பு மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை கொடுத்தனர். அவர்களிடம் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் 'வெப் கேமரா' மூலம் செல்போன் கொடுத்த பக்தரை படம் பிடித்து, புகைப்படத்துடன் கூடிய கட்டண சீட்டு வழங்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்களின் செல்போன்கள் பைகளில் வைத்து ரேக்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதில் குழுவாக வரும் பக்தர்களிடம் யாரேனும் ஒருவரின் புகைப்படம் மட்டும் எடுத்து கொள்ளப்பட்டது. மற்றபடி குழுவாக வந்த பக்தர்களின் செல்போன் அனைத்தும் ஒரே பையில் வைக்கப்பட்டு, மொத்த செல்போன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

நீண்ட வரிசையில் காத்திருப்பு

தொடர் விடுமுறையால் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் செல்போன் பாதுகாப்பு மையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். செல்போனை ஒப்படைத்துவிட்டு செல்லும் பக்தர்களிடம் படிப்பாதையில் உள்ள மண்டபத்தில் தீவிர சோதனை செய்யப்பட்டது.

அப்போது, செல்போன்கள் வைத்திருந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது, மீறினால் பறிமுதல் செய்யப்படும் என ஒலிபெருக்கியில் அறிவுறுத்தப்பட்டது.

கோவிலுக்கு சென்று தரிசனம் முடிந்த திரும்பியவர்கள், கட்டண சீட்டை பாதுகாப்பு மையத்தில் கொடுத்து தங்களது செல்போன்களை வாங்கி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com