

பழனி,
பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை உள்ளது. இதனால் அடிவாரத்தில் உள்ள செல்போன் பாதுகாப்பு மையத்தில் செல்போன்களை ஒப்படைத்து செல்ல வேண்டும். ஆனாலும் சிலர் தடையை மீறி செல்போன் கொண்டு செல்கின்றனர். அவ்வாறு கொண்டு செல்பவர்கள் கோவில் படிப்பாதையில் நின்று செல்பி புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்கின்றனர்.
அந்த வகையில் தடையை மீறி செல்போன் எடுத்து சென்ற 30 வயது உடைய வாலிபர் ஒருவர், தனது மனைவியை தூக்கிச்சென்று அதனை வீடியோ எடுத்து. அதன் பின்னணியில் சினிமா பாடல்களை ஒலிக்க செய்து ரீல்சாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அது இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.
கணவன்-மனைவி இடையே அன்பை வெளிப்படுத்த பல்வேறு வாய்ப்புகள் உள்ளபோது, இதுபோன்று கோவில்களில் வீடியோ எடுத்து அதை ரீல்சாக பதிவிடுவது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கோவில் நிர்வாகம் வீடியோ வெளியிட்ட பக்தர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.