

ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளை போடுவதற்கு இட வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமேசுவரம் கோவில்
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராமேசுவரம் கோவிலுக்கு இவ்வாறு வரும் பக்தர்கள் மூலம் தீர்த்தம் நீராடுதல், ஸ்படிகலிங்க தரிசனம், சிறப்பு தரிசன பாதை மற்றும் கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதி உண்டியல் வருமானம் என பக்தர்கள் மூலம் 1 மாதத்திற்கு பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது.
இந்த நிலையில் கோவிலின் பிரதான நுழைவு வாசல் கிழக்கு வாசல் பகுதிதான். இந்த வாசல் வழியாகத்தான் அதிகமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்துவிட்டு அம்பாள் சன்னதி வழியாகவே வெளியே வருகின்றனர். இதனிடையே கிழக்கு வாசல் பகுதியிலோ கோவில் நிர்வாகம் சார்பில் தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தர்களின் காலணிகள் போடுவதற்கு வசதியாக எந்த ஒரு இட வசதியும் செய்யப்படவில்லை.
இடவசதி இல்லை
தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிழக்கு வாசல் பகுதியிலேயே காலணிகளை கழட்டி விட்டு கோவிலுக்குள் செல்கின்றனர். இதனால் கோவிலின் பிரதான முக்கிய கிழக்கு வாசல் பகுதி எங்கு பார்த்தாலும் பக்தர்களின் காலணி குவியல்களாக காட்சியளித்து வருகிறது. 1 மாதத்திற்கு பல கோடி ரூபாய் பக்தர்கள் மூலம் வருமானம் வரக்கூடிய மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் கோவிலில் பக்தர்களின் காலணிகளை சரியான இடத்தில் போட்டு செல்வதற்கு கூட கோவில் நிர்வாக அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது என்றும், கோவில் வருமானத்தை பெருக்க ஆர்வம் காட்டும் அதிகாரிகள் பக்தர்கள் காலணியை போடுவதற்கு இடம் ஒதுக்காமல் அலட்சியமாக இருப்பதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளை போடுவதற்கு கிழக்கு வாசல் பகுதியில் இடம் ஒன்றை உடனடியாக அமைக்க கோவில் நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.