தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

தஞ்சை பெரியகோவிலில் நேற்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 1,010 ஆண்டுகள் ஆகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை பெரியகோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பின்னர் குடமுழுக்கு விழா கடந்த 5-ந்தேதி நடைபெற்றது. குடமுழுக்கு நடைபெற்றதையடுத்து மறுநாள்முதல் மண்டலாபிஷேக பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. மண்டலாபிஷேக பூஜை வருகிற 29-ந்தேதி நிறைவடைகிறது.

குடமுழுக்கு நடைபெற்ற பின்னரும் தஞ்சை பெரிய கோவிலுக்கு பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிக அளவில் உள்ளது. நேற்று முன்தினமும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பெரியகோவில் முன்பு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதல் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வெயில் கொளுத்தியதால் அதையும் பொருட்படுத்தாமல் பெருவுடையார் சன்னதிக்கு செல்லும் வழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். இதைப்போல வராகி, விநாயகர், முருகன், பெரியநாயகி அம்மன் சன்னதிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்செய்தனர்.

நேற்று மாலையிலும் தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் கோவிலின் முன்பு வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கோவிலுக்கு வாகனங்களிலும் அதிகமானோர் வந்தனர். அவர்கள் கார் மற்றும் வாகனங்களை திலகர் திடல், ராசா மிராசுதார் மருத்துவமனை சாலை, கோர்ட்டு சாலை உள்ளிட்ட இடங்களில் நிறுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து ஏராளமான போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com