குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடக்கம்

குடற்புழு நீக்க அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வதினால் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடக்கம்
Published on

சென்னை,

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (10.02.2026) சென்னை, சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு குடற்புழு மாத்திரைகளை வழங்கி, உறுதிமொழி ஏற்று, விழா பேரூரையாற்றினார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது,

2006-2007 ஆம் ஆண்டு தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தோம், 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஜெயலலிதா அம்மையார் இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளியில் தொடங்குவோம் என்று அறிவித்தார். நான்கு வருடங்களுக்கு முன்பாகவே சென்னை மாநகராட்சியில் தொடங்கிவிட்டது என்று மாற்று அறிக்கை வெளியிட்டோம். ஒரு மாநகராட்சி எல்லையில் தொடங்கி பிறகு மாநிலம் முழுவதும் ஒரு திட்டமாக மாறி இன்று தேசிய அளவில் ஒரு திட்டமாக மாறி உள்ளது அதற்கு வித்திட்டது சென்னை மாநகராட்சி. அன்று சென்னை மாநகராட்சி சார்பாக தொடங்கப்பட்டது இந்த பள்ளியில் தான். இந்தியா முழுக்க இந்த திட்டம் சென்று அடைந்திருக்கிறது என்றால் அதற்கு வித்திட்டது இந்த பள்ளிதான்.

குடற்புழு நீக்க அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வதினால் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது. இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. நினைவாற்றல், கற்றல்திறன் மற்றும் உடல்வளர்ச்சியை மேம்படுத்தவும். உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது என்றார். மேலும் 1 -19 வயதுடைய 2.1 கோடி குழந்தைகளுக்கும், 20-30 வயதுடைய 54.42 லட்சம் பெண்களுக்கும், மொத்தம் 2.56 கோடி பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாமில் 54,439 அங்கன்வாடி பணியாளர்களும், 58,600 பள்ளி ஆசிரியர்களும் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும், 6,093 மருத்துவர்களும், 12,456 கிராம சுகாதார செவிலியர்கள், 2,650 ஆஷா பணியாளர்கள் மற்றும் அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களும், இச்சிறப்பு முகாமில் ஈடுபடுகின்றனர்.

பறவை காய்ச்சல் பாதிப்பால் ஒரு கோழி இறந்து விட்டால் அதனை சாப்பிடக்கூடாது, மேலும் ஆஃபாயிலாக வேக வைத்த கோழியை சாப்பிடக்கூடாது, முழு பாயிலாக வேக வைத்த கோழியை தான் சாப்பிட வேண்டும் என்று நான் கூறினேன், நன்றாக வேகவைத்த முட்டையை தான் சாப்பிட வேண்டும், ஆபாயில் முட்டை சாப்பிட வேண்டாம் என்று நான் கூறவில்லை. என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com