டி.ஜி.பி. பெயரில் குறுந்தகவல் அனுப்பி கைவரிசை: போலீஸ் அதிகாரியிடம் ரூ.7¼ லட்சம் மோசடி

தமிழக டி.ஜி.பி. பெயரில் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி, நெல்லை போலீஸ் அதிகாரியிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
டி.ஜி.பி. பெயரில் குறுந்தகவல் அனுப்பி கைவரிசை: போலீஸ் அதிகாரியிடம் ரூ.7¼ லட்சம் மோசடி
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 12-வது பட்டாலியன் போலீஸ் கமாண்டண்டாக பணியாற்றுபவர் கார்த்திகேயன். இவரது செல்போனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல் வந்தது. அதில், தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு பரிசுக்கூப்பன் விழுந்திருப்பதாகவும், அதற்காக முன்பணம் செலுத்த வேண்டும் எனவும், தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பெயர் மற்றும் படத்துடன் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தனியார் நிறுவனம் மூலம் பல லட்சம் ரூபாய் பரிசாக அனுப்பிவைக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

ரூ.7 லட்சம் மோசடி

தொடர்ந்து சுமார் 10 முறை வந்து கொண்டிருந்ததால், தனது வங்கி கணக்கில் இருந்து அந்த எண்ணுக்கு ரூ.7 லட்சம் அனுப்பினார். எனினும் கார்த்திகேயனுக்கு அந்த குறுந்தகவல் மீண்டும் வந்து கொண்டே இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர், சைபர் கிரைம் போலீசார் மூலம் அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தார். அப்போது அது, போலீஸ் டி.ஜி.பி.யின் செல்போன் எண் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கார்த்திகேயன், இதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.

2 பேர் கைது

இதையடுத்து மோசடி கும்பலை தனிப்படை போலீசார் வலைவீசி தேடினர். நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் வெளிமாநிலங்களுக்கும் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த முரளி (வயது 32), வினைகுமார் (38) ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு செல்போன் சிம் கார்டு வாங்கி கொடுத்து உதவியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த செல்போன் சிம் கார்டுகள், ஆதார் அட்டை போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

டெல்லி விரைந்தனர்

மேலும் அவர்களிடம் இருந்து சிம் கார்டு வாங்கி மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com