முதல் அமைச்சர் விஜய்யுடன் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் சந்திப்பு

தமிழகத்தின் 34-வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்ட மகேஷ்குமார் அகர்வால் முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விஜய் - மகேஷ்குமார் அகர்வால்
Published on

கடந்த தி.மு.க. ஆட்சியில் பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமன் பணியாற்றி வந்தார். நிரந்தர டி.ஜி.பி. நியமிக்கப்படவில்லை. அதன்பின்னர் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தேர்தல் கமிஷன் வெங்கடராமனுக்கு பதிலாக சந்தீப்ராய் ரத்தோரை நியமித்தது. அவர் அந்தப்பொறுப்பில் பணியாற்றி வந்தார். த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. உடனடியாக நியமிக்கப்படவில்லை. தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர், சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தார். புதிய சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யை நியமிக்க த.வெ.க. அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, மகேஷ்குமார் அகர்வால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்ட மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்ட மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து காவல் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சென்னை தலைமை செயலகம் வந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மகேஷ் குமார் அகர்வால் பின்னணி

மகேஷ்குமார் அகர்வால், பஞ்சாப் மாநிலம், சண்டிகாரை சேர்ந்தவர். இவரது தந்தை பிரகாஷ் சந்த் அகர்வால், வக்கீல் ஆவார். தந்தை வழியில் இவரும் சட்டப்படிப்பில் தேர்ச்சி ஆனார். போலீஸ் மேலாண்மை படிப்பும் இவர் படித்துள்ளார்.இவர் தந்தை வழியில் வக்கீலாக நீதித்துறையில் பணியாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு இவரது குடும்பத்தில் இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் 1994-ம் ஆண்டில் தனது 23-வது வயதில் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சிபெற்று, தமிழக காவல்துறையில் தனது பணியை தொடங்கினார்.தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் இவர் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார். தேனி மாவட்டத்தில் இவர் பணியாற்றியபோது பெரும் சாதி கலவரம் வெடிக்க இருந்த நிலையில், அதை தடுத்து நிறுத்தி அமைதியை நிலைநாட்டினார். இவர் 7 ஆண்டுகள் சி.பி.ஐ.யில் பணியாற்றினார். அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாகவும் பணியாற்றியுள்ளார்.

ரெயில் குண்டுவெடிப்பு வழக்கு

சென்னை ரெயில் குண்டுவெடிப்பு வழக்கு, ரெயில் பெட்டி கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி கொள்ளை போன வழக்கிலும் இவர் சிறப்பாக பணியாற்றி, துப்புத்துலக்க உதவி னார். சென்னை சிருசேரி பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் குற்றவாளிகளை கைது செய்து, அவர்களுக்கு தண்டனை பெற்று தர பெரிதும் உதவினார். மதுரை போலீஸ் கமிஷனர் பதவியிலும் இவர் இருந்துள்ளார். சிறந்த புலனாய்வு அதிகாரி ஆவார்.

போலீஸ் கமிஷனர்

இவரது தாயார் தேவகிதேவி. இவரது மனைவி வனிதா, சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது சிறந்த பணிக்காக போலீஸ் விருது மற்றும் முதல்-அமைச்சர் விருது கிடைத்துள்ளது. கொரோனா காலத்தில் சென்னை போலீஸ் கமிஷனராகவும் சிறப்பாக பணியாற்றினார். இவர் போலீஸ் கமிஷனராக பணியாற்றியபோது, பொதுமக்களிடம் 'வீடியோ-கால்' மூலம் பேசி குறைகளை கேட்டறிவார். சென்னையில் உள்ள அனைத்து துணை கமிஷனர்களும் தினமும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்றும் இவர் ஆணையிட்டு அதை சிறப்பாக செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com