

தாராபுரம்,
தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தவெக சார்பில் சத்திய பாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதனால் 5 முனைப் போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யா இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர் பெலிக்ஸ் ராஜாவிடம் சுகன்யா தனது வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது திமுக துணை பொதுச்செயலாளர் மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதனை தொடர்ந்து மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல் செய்தார். மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு தொண்டர்கள் புடைசூழ வந்து வேட்புமனு தாக்கல் செய்தார் பரந்தாமன். அப்போது முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.