தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: த.வெ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: த.வெ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
Published on

சென்னை,

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

5 முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகங்களில் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12, 13, 14-ந் தேதி தொடர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மனு தாக்கல்

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது மனுவை தாக்கல் செய்தார். தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் வந்து மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மனு தாக்கல் செய்தார். மேலும், பனைமரம் ஏறும் தொழிலாளி சதீஷ்குமார் என்பவர் தனது தொழிலைக் குறிக்கும் வகையில் பனைமரம் ஏறும் உபகரணங்களுடன் வந்து சுயேச்சையாக மனு தாக்கல் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

15 பேர் வேட்புமனு

தாராபுரம் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த வக்கீல் சுகன்யா தி.மு.க. வேட்பாளராக 4 மனுக்களைத் தாக்கல் செய்தார். முன்னதாக அண்ணா படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி உள்ளிட்டோருடன் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜாவிடம் மனு அளித்தார். மேலும் இவரது கணவர் மணிவாசகமும் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இன்று கடைசி நாள்

இந்நிலையில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால், அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், மதுராந்தகத்தில் அ.தி.மு.க.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9 ஆம் தேதியும் நடைபெறும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com