

தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கதிரிபுரம் கவரமலை வனப்பகுதியில் இன்று (சனிக்கிழமை) வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வனக்காப்பாளர்கள், துர்நாற்றம் வீசிய திசையை நோக்கிச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள அடர்ந்த காட்டின் ஒரு மரக்கிளையில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த உடல் முற்றிலும் அழுகி, சிதைந்த நிலையில் காணப்பட்டது.
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த உடலை கீழே இறக்கி மீட்டனர். உடல் மிகவும் சிதைந்து போயிருந்ததால், அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்களை உடனடியாக கண்டறிய முடியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் அண்மைக் காலங்களில் காணாமல் போன நபர்களின் பட்டியலை சேகரித்து, சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்பது குறித்த அடையாளத்தைக் காணும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.