தருமபுரி: குடும்பத் தகராறில் நர்ஸ் அடித்துக் கொலை – சடலத்தை புதைத்த கள்ளக்காதலன் கைது

பாப்பாத்தியா உயிரிழந்ததையடுத்து பயந்துபோன வெங்கடாசலம், யாருக்கும் தெரியாமல் பாப்பாத்தியாவின் சடலத்தை மறைக்கத் திட்டமிட்டார்.
தருமபுரி: குடும்பத் தகராறில் நர்ஸ் அடித்துக் கொலை – சடலத்தை புதைத்த கள்ளக்காதலன் கைது
பாப்பாத்தியா- வெங்கடாசலம்
Published on: 

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் கடத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக ஹோம் நர்ஸ் ஒருவரை அடித்துக் கொலை செய்து, சடலத்தை குப்பை மேட்டில் புதைத்த கள்ளக்காதலனை கடத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தியா (வயது 46). ஹோம் நர்ஸான இவருக்கும், தருமபுரி மாவட்டம் கடத்தூர் மணியம்பாடியைச் சேர்ந்த வெங்கடாசலம் (வயது 41) என்பவருக்கும் கோவையில் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான இவர்கள் இருவரும், கடந்த 6 மாதங்களாக கடத்தூர் வெங்கடசாமி தெருவில் கணவன்-மனைவியாக வசித்து வந்தனர்.

அடித்துக் கொலை

இந்நிலையில், இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான மோதலில், வெங்கடாசலம் பாப்பாத்தியாவை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாப்பாத்தியாவுக்கு அதிக ரத்தம் வெளியேறிதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

குப்பை மேட்டில் புதைப்பு

பாப்பாத்தியா உயிரிழந்ததையடுத்து பயந்துபோன வெங்கடாசலம், யாருக்கும் தெரியாமல் பாப்பாத்தியாவின் சடலத்தை மறைக்கத் திட்டமிட்டார். இதற்காக அருகில் இருந்த ஒரு காலி இடத்தில் ரகசியமாக குழி தோண்டி சடலத்தைப் புதைத்து, அதன் மேல் குப்பைகளைக் கொட்டி மூடியுள்ளார்.

போலீஸ் நடவடிக்கை

இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) அன்று அந்த குப்பை மேட்டுப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் பாப்பாத்தியா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரின் கள்ளக்காதலனான வெங்கடாசலத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் வெங்கடாசலம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். மேலும், கொலைக்கான முழுமையான பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பை மேட்டில் பெண் சடலம் மீட்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com