மீண்டும் தர்மயுத்தமா...? ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்..?

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று அவர் தனது டுவிட்டரில் அதிமுகவில் அராஜகப் போக்கு நிலவி வருவதாகவும், தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என பதிவிட்டிருந்தார். இதன்மூலம் ஒற்றைத் தலைமை விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மனு அளித்திருந்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அளித்த மனுவை ஆவடி காவல் ஆணையரகம் நிராகரித்துள்ளது . பொதுக்குழு கூட்டம் பொது இடத்தில் வைக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை தடுக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் நாளை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளநிலையில், உறுப்பினர்களுக்கு 3 கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மண்டபத்தில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்விற்காக எடப்பாடி ஆதரவாளர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

இந்நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மீண்டும் தர்மயுத்தம் நடத்த ஒ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளாரா..? என்று கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com