பார்வர்டு பிளாக் கட்சியினர் தர்ணா

கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்வர்டு பிளாக் கட்சியினர் தர்ணா
Published on

கம்பம், வடக்கு போலீஸ் நிலையம் அருகில் முத்துராமலிங்கத் தேவர் சிலை உள்ளது. இந்த சிலை அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேற்று இரவு கொடிக்கம்பம் நடப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்து கொடிக்கம்பத்தை அகற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில், கட்சியினர் தேவர் சிலை அருகே அமர்ந்து கொடிக்கம்பம் வைக்க அனுமதி வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி, இன்ஸ்பெக்டர்கள் சரவணன், லாவண்யா ஆகியோர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தேவர் சிலை அருகே பல ஆண்டுகளாக கொடிக்கம்பம் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக தேவர் சிலை அமைப்பதற்காக கட்டிடம் கட்டும் போது கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. பணிகள் முடிந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு அதே பகுதியில் கொடிக்கம்பம் நடப்பட்டது. புதிதாக கொடிக்கம்பம் நடப்படவில்லை என்று கட்சியினர் தெரிவித்தனர்.

பின்னர் தாங்கள் ஏற்கனவே கொடிக்கம்பம் அமைத்ததற்கான ஆதாரங்களை கொண்டு வரவேண்டும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து வருகிற 31-ந்தேதி வரை தற்காலிகமாக கொடிக்கம்பத்தை அமைத்து கொள்வது, அதற்கு பிறகு துறை ரீதியான அனுமதியை பெற்று கொடிக்கம்பத்தை அமைத்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கட்சி நிர்வாகிகள் தேவர் சிலை அருகே தற்காலிகமாக கொடிக்கம்பத்தை அமைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com